உடுமலை சாதி ஆணவக்கொலை: பிடிபட்டவர்கள் கூலிப்படையினரா?
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் கிராமம் சாவடி தெருவில் வசிக்கும தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர் (வயது 22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்த, திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யா (வயது 19) என்ற தேவர் சாதிப்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சங்கரும், கவுசல்யாவும் ஜவுளி எடுக்க உடுமலைப்பேட்டைக்கு சென்றிருந்தபோது, அரிவாள் ஏந்திய ஒரு கும்பல், பட்டப்பகலில், நடுரோட்டில், பொதுமக்கள் கண் முன்னால் அந்த இருவரையும் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டது. இதில் சங்கர் துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படுபாதகச் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் (வயது 29). இவர் மீது ஏற்கெனவே 2 கொலை வழக்குகள் உள்ளன.
இன்னொருவர் நிலக்கோட்டை தாலுகா பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர் ந்த மணிகண்டன். இவர், மேலே குறிப்பிடப்பட்ட ஜெகதீஸின் கூட்டாளி. தேனியில் உள்ள ஒரு கல்லூரியின் பின்புறம் க்டந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஜெகதீஸூடன் இந்த மணிகண்டனுக்கும் தொடர்பு இருந்திருந்திருக்கிறது.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார், கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் என்ற மதன்குமார், பழனியைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டன் ஆகியோர் ஏனைய மூவர்.
இந்த 5 பேரும் பட்டிவீரன்பட்டி மணிகண்டன் வீட்டில் பதுங்கியிருந்ததாகவும், அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், ஊடகங்களுக்கு போலீஸ் கசியவிட்ட புகைப்படத்தில் (மேலே உள்ள படத்தில்) 4 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இன்னொருவரை போலீசார் மறைத்து வைத்திருக்கிறார்கள். தவிர, சின்னாளபட்டியைச் சேர்ந்த தன்ராஜ், பழனியைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் கூறுகிறார்கள்.
உண்மையில் கொலை செய்தது இவர்கள் தானா என்பதை, கொலை நடந்த இடத்தில் பொருத்தப்படிருக்கும் கேமராவில் பதிவான காட்சியைக் கொண்டும், சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவை அடையாளம் காட்டச் சொல்லியும் போலீசார் முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.
பிடிபட்டிருக்கும் ஜெகதீஸ், பட்டிவீரன்பட்டி மணிகண்டன் ஆகியோரின் கடந்தகால குற்றச்சரித்திரத்தை வைத்துப் பார்க்கும்போது, இவர்களெல்லாம் கூலிக்காக கொலை செய்யும் கூலிப்படையின்ரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனில், இவர்களை பணம் கொடுத்து அமர்த்திய சாதிவெறியர்கள் யார்? ஆரம்பத்திலிருந்தே சங்கருக்கும் கவுசல்யாவுக்கும் கொலை மிரட்டல் விடுத்துவந்த கவுசல்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எங்கே? நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து, மதுரை மத்திய சிறையில் பாதுகாப்பாக இருக்கும் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்போவது எப்போது?
போலீஸ் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் பிடித்துவந்து சட்டத்தின்முன் நிறுத்தப் போகிறதா? அல்லது பொதுமக்களின் கொந்தளிப்பைத் தணிப்பதற்காக கூலிப்படையைச் சேர்ந்த சிலரை மட்டும் பிடித்து கண்துடைப்பு நாடகம் நடத்துகிறதா? என்பதைப் பொறுத்து மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரியவரும்.