“கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்திய வெற்றித் தளபதி ஸ்டாலின்”: பாஜக மூத்த தலைவர் புகழாரம்

திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதனின் இல்லத் திருமண விழா இன்று (செப்டம்பர் 5) திருப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், “கருணாநிதிக்குப் பிறகு யார் என்று வருகிறபோது, மு.க.ஸ்டாலின், தளபதியாக மட்டுமல்லாமல், எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் திகழ்கிறார். நாங்கள் இன்னும் கருணாநிதி போல அதிகம் உழைக்க வேண்டும் என்பதைத்தான் இதிலிருந்து நான் எடுத்துக்கொள்கிறேன்” என பேசினார்.

பொதுவாக தமிழக பாஜக தலைவர்கள் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரை சி.பி.ராதாகிருஷ்ணன் ‘வெற்றித் தளபதி’ என பாராட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா ஆளுநராகும் தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில், சிபி.ராதாகிருஷ்ணனும் உள்ளார். இருமுறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்திருக்கும் அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிட்த்தக்கது.