தனுஷ் படத்துக்கு பதிலாக சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் படம் ரிலீஸ் ஆகிறது!

தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் வருகிற 6ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அன்றைய தேதியில் சித்தார்த் – ஜி,வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், வேல.ராமமூர்த்தி, செந்தில் வீராசாமி, சுனைனா, ராணா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. கவுதம் வாசுதேவும் ’எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்’ மதனும் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. பணப் பிரச்சனை காரணமாக இப்படம் அவ்வப்போது கிடப்பில் போடப்பட்டு, நீண்ட இழுபறிக்குப்பின் எடுத்து முடிக்கப்பட்ட்து. ஆறு மாதங்களுக்கு முன்னால் தணிக்கை முடிந்து இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படம் வருகிற (செப்டம்பர்) 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட்து.

இதற்கிடையே, சசி இயக்கத்தில், அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் இதே (செப்டம்பர்) 6ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், திரையுலக முக்கிய பிரமுகர்கள் சிலர் அபிஷேக் பிலிம்ஸிடம்  ”எனை நோக்கிப் பாயும் தோட்டா’ நீண்டகால இழுபறிக்குப்பின் வெளியாகிறது. அது தனித்து ரிலீசானால் தான் நல்ல வசூலாகி, பணப் பிரச்சனையிலிருந்து கவுதம் வாசுதேவ் மீள வழி பிறக்கும். எனவே, உங்களது ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ பட வெளியீட்டை சற்று தள்ளி வைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது படத்தை 6 நாட்கள் தள்ளி செப்டம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்தது.

ஆனால், இன்னும் ரூ.35 கோடி கடன் பிரச்சனை தீராமல் இருப்பதால் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ வருகிற 6ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்பில்லை என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

எனவே முதலில் திட்டமிட்டபடி ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.