’போலீஸ் ராஜ்ஜியம்’ என்பது எப்படியான அவலங்களுக்கு வித்திடும்?

ரொட்ரிகோ டுடேர்டெ பிலிப்பைன்ஸ் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி. அதீத வலதுசாரி சிந்தனைகள் கொண்ட இவர் அதிரடி தீர்வுகளில் நம்பிக்கை உள்ளவர். பிலிப்பைன்ஸை பீடித்து இருந்த போதை மருந்து பிரச்சினையில் இருந்து தேசத்தை மீட்க அதீதமான உத்தியை கண்டுபிடித்தார். அது இதுதான்: போதைப்பொருள் விற்பவர்களை, பயன்படுத்துபவர்களை, கடத்துபவர்களை எல்லாரையும் கொலை செய்து விடுவது. போதைப்பொருள் பக்கம் போனாலே கொலை என்றால் யாரும் அதன் பக்கம் போக மாட்டார்கள்தானே? பிரச்சினை தீர்ந்தது. சுபம்.

அவர் ஆட்சிக்கு வந்ததும் போலீசுக்கு இந்த ‘உரிமையை’ கொடுத்தார். உரிமை மட்டுமல்ல, போதை மருந்து குற்றத்தில் போலீஸ் செய்யும் ஒவ்வொரு கொலைக்கும் போனஸ் கிடைக்கும். மருந்து பயன்படுத்துபவன் என்றால் 200 டாலர். ஏரியாவில் விற்பவன் என்றால் 400 டாலர். டிஸ்ட்ரிபியூட்டர் என்றால் 20,000 டாலர். போதை மருந்து கடத்தும் டான் என்றால் ஒரு லட்சம் டாலர் போனஸ் அறிவிக்கப்பட்டது. போதை மருந்து பயன்படுத்துவோர், விற்போர் தாங்களாக சரணடைந்தால் இப்படி கொலையுறுவதில் இருந்து தப்பிக்கலாம்.

ஆரம்பித்தது வேட்டை. கிட்டத்தட்ட 97 சதவிகிதம் ரெய்டுகளின் நடுவிலேயே ஆட்கள் கொல்லப்பட்டார்கள். அதாவது இது என்கவுண்டர் கூட இல்லை. ஒருவனை தேடிப்போகும் பொழுதே அவனை கொலை செய்து விடுவது. காரணம்: போலீஸ் கொலை செய்தால்தான் போனஸ். கைது செய்து சிறையில் அடைத்தால் தனியாக போனஸ் கிடையாது. எனவே கஷ்டப்பட்டு கைது செய்வதற்கு எந்த ஊக்கமும் அவர்களுக்கு இல்லை. அப்புறம் எதற்கு கைது, சிறை என்று வேலையும் செய்து போனஸையும் இழப்பது. போட்டு தள்ளி விட்டால் பணத்துக்கு பணம்; வேலையும் மிச்சம்.

அது கிடக்கட்டும் கழுதை; புத்தனா போயிட்டான்; போதை மருந்து பொறுக்கிதானே போனான் என்று நாம் மகிழலாம்.

நடக்கும் கொலைகளில் நிறைய போதை விற்பவர்களாகவே இருந்தார்கள். அதாவது 200 டாலரை விட 400 அதிகம்தானே? போதை பயன்படுத்துபவர்களையே கூட போட்டு தள்ளி விட்டு அவர்களிடம் போதை மருந்து பாக்கெட் சட்டையில் சொருகி, இவனும் விற்கிறான் என்று காட்டினால் 200 டாலர் அதிகம் கிடைத்தால் ஏன் விடுவானேன்?

ஆனால் இந்தக்கொலைகள் செய்வது பிடிக்காத பல காவலர்கள் இருந்தார்கள். அவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். அடுத்து இப்படி கொல்லாமல் கைது செய்ய அலையும் காவலர்கள் மேல் ஒரு பழி விழுந்தது. இவர்களுக்கும் போதை பிசினஸில் பங்கு இருக்கிறது; அதனால்தான் தங்கள் கூட்டாளிகளை கொல்லாமல் தவிர்க்கிறார்கள் என்று பழிச்சொல் எழவே, வேறு வழியின்றி அவர்களும் ஜோதியில் கலக்க வேண்டி வந்தது. கொலைகள் மேலும் அதிகரித்தன.

இதன் அடுத்த கட்டமாக, போட்டி போதை மருந்து குழுக்கள் போலீசுக்கு பணம் கொடுத்து அடுத்தவரின் குழுவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தீர்த்துக்கட்டும் வேலைகளை செய்கிறார்கள் என்று புகார் எழுந்தது.

இப்படி போலீசை ஆள் வைத்து கொல்லும் விஷயம் அடுத்த லெவலுக்குப் போனது. பக்கத்துக்கு வீட்டுக்காரன் பிளாட்டை ஆட்டையப் போட வேண்டுமானால் அவனிடம் போய் ‘எனக்கு ஒரு இன்ஸ்பெக்டர் நல்லா தெரியும். ஒழுங்கா பிளாட்டை என் பேர்ல எழுதி கொடுத்துரு. இல்லேனா கஞ்சா கேஸ்ல மாட்டி விட்டிருவேன்!’ என்று மிரட்டினால் போதும். உயிரா, நிலமா என்றால் எந்த முடிவு எடுப்போம்?

இந்த மாதிரி புகார்கள் பல்வேறு இடங்களில் எழுந்தன. இதில் இருந்து தப்பிக்க, அப்படி மிரட்டல் வந்த பலர் தாங்களாக சரணடையத் துவங்கினார்கள். சிறைகள் நிரம்பத் துவங்கின.

அடுத்ததாக போதை பயன்படுத்துவோர் சந்திக்கும் முக்கிய பிரச்சினை தொற்று நோய்கள் அவர்களிடையே சுலபமாக பரவுவதுதான். ஒரே ஊசியை பற்பல பேர் பயன்படுத்துவதால் வரும் பிரச்சினை இது. எய்ட்ஸ் வரை கூட இவர்கள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும். இதனை தவிர்க்க அமெரிக்காவின் நிறைய மாகாணங்களில் லோக்கல் கிளினிக்குகளில் disposable syringeகள் இலவசமாக கொடுக்க ஆரம்பித்தார்கள். இது ஆரம்பத்தில் மக்களிடையே எதிர்ப்புக்கு உள்ளானாலும் எய்ட்ஸ்சை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பெரிதும் உதவியது.

ஆனால் பிலிப்பைன்ஸில் போதை பயன்படுத்துவதை வெளியேயே சொல்ல முடியாத நிலை இருக்கும் பொழுது இவர்கள் எப்படி ஆஸ்பத்திரி போவது? அல்லது மருந்து கடையில் புதிய ஊசிகள் வாங்குவது? விளைவு: எய்ட்ஸ் தொற்று கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உயர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. எய்ட்ஸ் தவிர ஹெபடிடிஸ், டிபி போன்ற தொற்று நோய்கள் பரவி வருகின்றன.

எல்லா போலீஸ் அதிரடி போலவே இதிலும் ஏழைகளும் ஒடுக்கப்பட்ட மக்களும்தான் பெரிதாக பாதிப்புக்கு உள்ளானவர்கள் (victims). எந்தக்கேள்வியும் கேட்க முடியாமல், எந்தத்தீர்வும் கிடைக்காமல் அடிபட்டு நாய் போல செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சிகரம் வைத்தாற்போல, இந்த திட்டத்தை எதிர்க்க முயற்சி செய்த எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எல்லாம் போதைக்கு ஆதரவானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். அவர்களில் சிலர் மேலேயே கூட போதை மருந்து ‘கடத்தல்’ குற்றம் விழுந்து கைதாகும் பொழுது ‘தப்பி ஓடியதில்’ கொலை செய்யப்பட்டார்கள். தனக்கு எதிராக வலுவாக உருவாகும் தலைவர்கள் மேல் எல்லாம் போதை குற்றம் சாட்டி அவர்களை டுடேர்டெ ஒழித்துக் கட்டுகிறார் என்று உலக நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஜனாதிபதியே செய்யும்பொழுது லோக்கல் அரசியல்வாதிகள் இந்த உத்தியை விட்டு வைப்பார்களா? லோக்கல் லெவலில் கூட பஞ்சாயத்து தேர்தலில் தங்களுக்கு எதிராக நிற்க முயற்சித்தவர்களை போதை மருந்து குற்றம் சாட்டி போட்டு தள்ளி இருந்திருக்கிறார்கள்.

சோகம் என்னவென்றால், இந்த எந்த நடவடிக்கையும் போதை மருந்தை நிறுத்த உதவவில்லை. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறைகள், அரைகுறையாக நடத்தப்படும் போதை விடுதலை மையங்கள் எல்லாம் போதை மருந்துகளை பரப்ப பெரிதும் உதவுகின்றன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 30,000 பேர் இந்த திட்டத்தினால் கொலையுண்டு இருந்திருக்கலாம் என்று பிபிசி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தவிர போகிறவன் வருகிறவனை எல்லாம் சிறையில் தள்ளுவது இன்னொரு பிரச்சினையை உருவாக்கும். அதாவது பிக் பாக்கெட் அடித்தவனை ஒரு கேங்ஸ்டர் தாதாவுடன் சிறையில் தள்ளினால் அவன் வெளியே வரும் பொழுது அந்த தாதாவிடம் வேலைக்கு சேரும் சாத்தியக்கூறு இருக்கிறது. இந்தோனேசியாவில் மொக்கை குற்றங்களுக்கு கைதானவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகளோடு சிறைப்படுத்தப்பட, அவர்களில் நிறைய பேர் வெளியே வரும் பொழுது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வரிந்து கொள்ளும் அளவுக்குப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. யோசித்துப் பாருங்கள்: தங்களின் கேங்குகளுக்கு ஆள் எடுக்க ‘கேம்பஸ் இன்டர்வியூ’ செய்வதற்கு ஜெயிலை விட உகந்த இடம் இருக்குமா என்ன? அங்கே ஆயிரக்கணக்கானவர்களை கொண்டு போய் அடைத்து வைத்தால் தாதா கும்பல்களுக்கும் வசதிதானே? அதுதான் பிலிப்பைன்ஸில் நடந்து வருகிறது.

அதாவது என்ன நடந்திருக்கிறது? ஒரு குற்றத்தை அதிரடியாக ‘சரி செய்கிறேன்’ பேர்வழி என்று ஆரம்பித்தது இப்போது பல்வேறு கொடூர குற்றங்களுக்கு மற்றும் பிரச்சினைகளுக்கு அடிகோலி இருக்கிறது. ஆனால் எந்த ஒரிஜினல் பிரச்சினையை தீர்க்க ஆரம்பித்தார்களோ அது அப்படியே தொடர்கிறது. மோசமாகவும் ஆகி இருக்கிறது. ‘போலீஸ் ஸ்டேட்’ என்பது எப்படியான அவலங்களுக்கு வித்திடும் என்பதற்கு பிலிப்பைன்ஸ் ஒரு முக்கிய உதாரணம்.

SRIDHAR SUBRAMANIAM

 

 

Read previous post:
0a1e
தமிழகத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த 3000 பேருக்கு விரைவில் சம்மன்!

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள் என்கிற தகவலுடன், அவர்களின் பட்டியலை எஃப்.பி.ஐ இந்திய ஒன்றிய உள்துறைக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 5000

Close