“மக்களின் தரத்திற்கு தக்கபடியே தான் அரசும் அமையும்!”
200 ரூபாய் பணத்திற்கும், ஒரே ஒரு பிரியணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்…?
அயோக்கியன் என்று தெரிந்த பின்னும் அவனுக்கு ஆரத்தி எடுத்து, ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரைப் பணத்திற்காக பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்….?
எத்தனை கொடுமைகள் இழைத்தாலும் அதனையெல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்…?
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள், கிராமத்திற்கு 20 பேர் படித்து பட்டம் பெற்று வேலைக்கு செல்கிற தகுதியோடு இருந்தும், அவர்களுக்குரிய வேலைவாய்ப்புகளை தட்டிப் பறித்து வஞ்சிக்கும் அரசாகவே இருக்கிறது என்பதை கொஞ்சங்கூட உணராமலே வெறும் தத்தியாக இருக்கும் இளைஞர்களிடத்திலிருந்து மாற்றம் எப்படி நடக்கும்….?
படித்தவனாக இருந்தும், சூதும் வாதும் பாவமும் செய்கிற சமூகத்தில், முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்…?
என் அப்பா அந்தக் கட்சி, என் தாத்தா அந்தக் கட்சி, நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று, அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத் தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிற சமூகத்தில் புதிய மறுமலர்ச்சி எப்படி உருவாகும்…?
நமது தாத்தனும் அப்பனும் பாடுபட்டு வளர்த்த கட்சி, கடைசியில் தலைவரின் குடும்ப சொத்தாகிப் போனதின் சூது தெரியாமல் ‘வாழ்க’ கோஷங்களை வாய் கிழிய எழுப்பும் மகன்கள் இருக்கிற நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்…?
கட்சி எது..? சின்னம் எது…? தலைவர் யார்..? எது சரியான பாதை..? என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பொறியியல் பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினரால் மாற்றம் எப்படி வந்து சேரும்..?
தேர்தல் என்றால் அது விடுமுறை நாளாகவோ, தேர்திருவிழா போன்ற ஒருநாளாகவோ, குதூகலித்து கொண்டாட மட்டுமே இருக்கிற… அது பற்றி சிந்திக்கவே மறுக்கிற சமூகத்தில் புதிய மாற்றத்திற்கான அரசு எப்படி சாத்தியம்…?
எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலேயே நிறைவடைந்து… உயிரைக் கொடுக்கும் விசுவாசிகளாக இருக்கிற வரையிலும்… நிம்மதியான வாழ்க்கைக்கோ, எதிர்கால வாழ்க்கைக்கோ, எதிர்கால சந்ததியினருக்காகவோ ஒருபோதும் வாழப் போவதில்லை…!
என்ன செய்வது…?
“மக்களின் தரத்திற்கு தக்கபடியே தான் அரசும் அமையும்…..!”///யாரோ.
(படித்ததில் பிடித்தது)