நிழற்குடை – விமர்சனம்

நடிப்பு: தேவயானி, விஜித், கண்மணி, ஜி.வி.அஹானா அஸ்னி (பேபி), நிஹாரிகா (பேபி), ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சிவா ஆறுமுகம்

வசனம்: ஹிமேஷ்பாலா

ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ்

படத்தொகுப்பு: ரோலக்ஸ்

இசை: நரேன் பாலகுமார்

தயாரிப்பு: ஜோதி சிவா

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான் / தேன்மொழி

தகுதிக்கும், சக்திக்கும் மீறிய ஆசைகளை, இலட்சியங்களை, தேவைகளை உருவாக்கிக்கொண்டு, அவற்றை எட்டிப் பிடிப்பதற்காக அனுதினமும் ஆலாய் பறக்கும் இன்றைய இளம் தலைமுறையினர், தங்களைப் பெற்ற பெற்றோர்களையும், தாங்கள் பெற்ற குழந்தைகளையும் கவனிக்க இயலாத ’வாழ்க்கைமுறை’க்குள்ளும், மனநிலைக்குள்ளும் சிக்கி அல்லாடுவது இக்கால குடும்பங்களில் அதிகரித்து வருகிறது. இத்துயர்மிகு பிரச்சனையை மையமாக வைத்து, போரடிக்கும் விதத்தில் பாடமாக எடுக்காமல், ரசிப்புக்குரிய அழகிய திரைப்படமாக அறிமுக இயக்குநர் சிவா ஆறுமுகம் படைத்தளித்திருப்பதே ‘நிழற்குடை’.

ஜோதி (தேவயானி) ஈழத்துத் தமிழ்பெண். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிப்போரில் தன் மகள் உட்பட தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து, அநாதையாக தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். இங்கு கோபால் (மனோஜ் குமார்) பொறுப்பாளராக இருக்கும் முதியோர் இல்லத்தில் பணியாளராக சேர்ந்து, அங்குள்ள முதியோர்களை அன்போடும், ஆதரவோடும் கவனித்து, அந்த முதியோர் இல்லத்துக்கு முதலமைச்சரின் விருது கிடைக்கும் அளவுக்கு பெரும்புகழ் சேர்த்தவர்.

மறுபுறம், நிரஞ்சன் (விஜித்) இந்து. லான்சி (கண்மணி) கிறிஸ்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது திருமணத்தை பெற்றோர்கள் ஏற்கவில்லை. அதனால் பெற்றோர்களைப் புறந்தள்ளிவிட்டு, புதுமணத் தம்பதியாக, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடியேறியவர்கள். ஐ.டி நிறுவனம் ஒன்றில், கை நிறைய சம்பளத்தில் வேலை பார்க்கும் இவர்கள், எப்படியாவது அமெரிக்காவில் வேலை வாங்கி, அந்த நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள்.

நிரஞ்சன் – லான்சி தம்பதிக்கு ’நிலா’ என்ற மூன்று வயது பெண் குழந்தை (பேபி அஹானா அஸ்னி) இருக்கிறது. கணவனும், மனைவியும் வேலைக்குச் செல்வதால், அவர்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ’கேர் டேக்கராக’ ஓர் இளம்பெண்ணை நியமிக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண்ணோ இவர்கள் வேலைக்குச் சென்றபிறகு, குழந்தைக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துவிட்டு, தன் காதலனை வரவழைத்து, உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். கேர் எடுக்காத இந்த துஷ்ட இளம்பெண்ணால் குழந்தை நோய்வாய்ப்படுகிறது. அளவுக்கு அதிகமாக தூக்க மருந்து கொடுக்கப்பட்டதால் தான் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மருத்துவர் வித்யா (நீலிமா ராணி) கண்டறிந்து சொல்ல, ஆவேசமடையும் பெற்றோர் அந்த கேர் டேக்கரை அடித்துத் துரத்திவிடுகிறார்கள்.

இந்நிலையில், குழந்தை நிலாவின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாட விரும்பி, அவர்கள் ஜோதி பணிபுரியும் முதியோர் இல்லத்துக்கு வருகிறார்கள். அங்கு முதியோரிடம் ஜோதி காட்டும் அன்பும் அக்கறையும் அவர்களுக்குப் பிடித்துப் போகிறது. தங்கள் குழந்தைக்கு கேர் டேக்கராக வருமாறு ஜோதியை வேண்டுகிறார்கள். நிலாவைப் பார்க்கும் ஜோதிக்கு, அது மறைந்த தனது மகள் போல் இருப்பதாகத் தோன்றுகிறது. சம்மதிக்கிறார்.

நிரஞ்சன் – லான்சி தம்பதியின் வீட்டோடு தங்கும் ஜோதி, குழந்தை நிலாவை தான் பெற்ற பிள்ளை போலவே கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார். அவரிடம் குழந்தையும் மிகுந்த பாசத்துடன் பழகுகிறது. இப்படியே அது வளர்ந்து 5 வயது நிலா (பேபி நிஹாரிகா) ஆகிறது.

அமெரிக்காவில் குடியேறும் கனவிலிருக்கும் நிரஞ்சன் – லான்சி தம்பதிக்கு விசா கிடைத்து விடுகிறது. மகிழ்ச்சி அடைகிறார்கள். ஜோதியை தனது தாய்க்கும் மேலாக நேசிக்கும் குழந்தை நிலா, அமெரிக்காவுக்கு ஜோதியும் வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. ஆனால் அது சாத்தியம் இல்லை என்ற நிலையில், அமெரிக்கா புறப்படுவதற்கு முந்தின இரவு குழந்தை நிலா திடீரென காணாமல் போய்விடுகிறது.

தாங்கள் அமெரிக்கா செல்வதைத் தடுக்க நினைக்கும் சதிகாரர்கள் இதை செய்திருக்கலாம் என்று கருதும் பெற்றோர், லான்சியின் குடும்பத்தினர் உட்பட சிலர் மீது போலீசில் புகார் அளிக்கிறார்கள். புகாரை பெற்றுக்கொள்ளும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தன் படையுடன் நிலாவை தீவிரமாகத் தேடுகிறார்.

இறுதியில் குழந்தை நிலா கிடைத்ததா, இல்லையா? அது காணாமல் போனதற்கு யார் காரணம்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, இல்லையா? பரஸ்பரம் பிரிய மறுக்கும் நிலா – ஜோதி நிலை என்ன? நிரஞ்சன் – லான்சி அமெரிக்கக் கனவு என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லருக்கு நிகரான விறுவிறுப்புடன் எமோஷனலாக விடை அளிக்கிறது ‘நிழற்குடை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஜோதி கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, தற்போதைய இளம் தலைமுறையினரை சிந்திக்கத் தூண்டும் வகையில் அருமையாக நடித்திருக்கிறார். கை நிறைய சம்பாதிப்பதும், ஆடம்பரமாக வாழ்வதும் மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை குழந்தைகள் மீதும், முதியோர் மீதும் தான் காட்டும் அன்பு மற்றும் அக்கறை மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார். அனைவருக்கும் முன்னுதாரணமான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்து விடுகிறார். குழந்தையைக் கடத்தியதாக அவரை போலீஸ் சந்தேகப்படும்போது துடித்துப்போவது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இன்றைய இளம் தம்பதியரின் பிரதிநிதிகளாக, நிரஞ்சன் – லான்சி தம்பதியாக விஜித் – கண்மணி நடித்திருக்கிறார்கள். கொடுத்த வேலையை குறைவில்லாமல் நிறைவாக செய்திருக்கிறார்கள். இவர்களது குழந்தை நிலாவாக முதலில் 3 வயது பேபி அஹானா அஸ்னியும், பின்னர் 5 வயது பேபி நிஹாரிகாவும் உள்ளத்தைக் கவரும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

வித்தியாசமான லுக்கில், ராபர்ட் ஆண்டர்சன் / அமீர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டும் தர்ஷன் சிவாவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் முதலில் டெரராக இருந்தாலும், முடிவில் எதிர்பாராத திருப்பத்துடன் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகின்றன.

முதியோர் இல்ல பொறுப்பாளர் கோபாலாக வரும் மனோஜ் குமார், பெண் மருத்துவர் வித்யாவாக வரும் நீலிமா ராணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகமாக வரும் இளவரசு, ஐ.டி நிறுவனத்தின் எம்.டி மோகன்ராமாக வரும் ராஜ்கபூர், நிரஞ்சனின் அம்மா கல்யாணியாக வரும் வடிவுக்கரசி, அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி ரவியாக வரும் கவிதாரவி, கவிதாவாக வரும் அக்‌ஷரா, லாரன்ஸாக வரும் பிரவீன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவா ஆறுமுகம். இன்றைய காலகட்டத்துக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு தேவைப்படும் அவசியமான கருத்தை மையமாக வைத்து, அதை யதார்த்தத்துக்கு நெருக்கமான கதையாக வளர்த்தெடுத்து, சுவாரஸ்யமான திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து, சிறந்த நடிப்புக் கலைஞர்களையும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து பணிபுரிய வைத்து, படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். பாராட்டுகள். எதிர்காலத்திலும் இது போன்ற சிறந்த படங்களை அவரிடம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

ஹிமேஷ்பாலாவின் வசனம், நரேன் பாலகுமாரின் பாடலிசை மற்றும் பின்னணி இசை, ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு, ரோலக்ஸின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் நேர்த்திக்கும், இயக்குநரின் கதை சொல்லலுக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘நிழற்குடை’ – குடும்பங்கள் கொண்டாடத் தக்க சிறந்த படம்!

ரேட்டிங்: 3.5/5