எப்படி இருக்கிறது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் டிரைலர்?
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, தனுஷ் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50-வது படமான இப்படத்தில் துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
வண்டிக்கடை செட்டப்பில் உள்ள உணவுக்கடை நடத்தும் நபர்களின் கைகளில் ரத்தக்கறை படிந்த ஆயுதங்கள் இருப்பது போல செம டெரராக ஏற்கெனவே இதன் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அதன்பின் அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.
’ஏ’ சான்றிதழுடன் வருகிற (ஜுலை) 26ஆம் தேதி இப்படம் உலகெங்கும் திரைக்கு வருவதையொட்டி, இதன் டிரைலர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனுஷின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
”காட்டுலையே ஆபத்தான மிருகம் எது தெரியுமா?” என செல்வராகவன் கேட்பது போல டிரைலர் ஆரம்பிக்கிறது. அதற்கு ”சிங்கம் தான்” என்று பதில் சொல்லுகிறார் குட்டி தனுஷ். ”அது இல்லை. சிங்கம் வலிமையான மிருகம். ஆனால் ஆபத்தான மிருகம் ஓநாய். ஒத்தைக்கு ஒத்த நின்னா சிங்கம் ஓநாய அடிச்சிடும். ஆனா ஓநாய் தந்திரவாதி. அது ஸ்கெட்ச் போட்டு சிங்கத்தையே சாகடிச்சிடும்” என்ற செல்வராகவனின் வசனம் காட்சிகளுடன் பொருந்திப் போகிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா, தனுஷுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகளைப் பார்த்துவிட்டு, “அவன் ஆம்பளையா இருந்தா இங்க வந்து போடச் சொல்லு” என்று சொல்ல, “பேய் மாதிரி வருவான்” என வசனம் தெறிக்கிறது.
பிரகாஷ்ராஜும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.
மொட்டை அடித்துக்கொண்ட தனுஷின் தோற்றமும், தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் மூன்று பேரும் சேர்ந்த நிற்கும் ப்ரேமும் ஈர்க்கிறது.
டிரைலரின் இறுதியில், காவல் நிலையத்தில், “என்ன சொன்ன, வாபஸ் வாங்கிட்டானுக…” என தனுஷை கேட்டதும், ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிகாந்த் சொல்வதைப்போல “உண்மையைச் சொன்னேன்” என சொல்லிவிடுவாரோ என நினைத்தால், யாருமே எதிர்பார்க்காதபடி, “கெஞ்சிக் கேட்டேன்” என்று சொல்லி பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
பின்னணி இசை கவனம் பெறுகிறது. அழுத்தமான ஆக்ஷன் கதைக்களத்தில் (அநேகமாக வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு) படம் உருவாகியிருப்பதை டிரைலர் உணர்த்துகிறது.
மொத்தத்தில் ‘ராயன்’ அட்டகாசமாக ஹிட் அடிக்கும் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது டிரைலர்.