நிபுணன் – விமர்சனம்

‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பரபரப்புக்கு மத்தியில், அந்த பரபரப்பைப் பின்னுக்குக் தள்ளி வெற்றி வாகை சூடும் வகையில், ரத்தத்தை உறையச் செய்யும் தொடர் கொலைகாரன் (சீரியல் கில்லர்) பற்றிய கதை, சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை, பார்வையாளர்களை கட்டிப்போடும் மேக்கிங், சுவாரஸ்யமான நடிப்பு என அனைத்து சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது ‘நிபுணன்’.

அர்ஜுன் ஒரு போலீஸ் உயர்அதிகாரி. அவர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுவிற்கு சவால் விடும் வகையில், சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயங்களாக விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன.

அர்ஜூன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு இக்கொலை தொடர்பான தடயங்களை சேகரித்துக்கொண்டிருக்கையிலேயே, ஒரு டாக்டர், ஒரு வக்கீல் என அடுத்தடுத்து மேலும் இருவர், முதல் கொலை பாணியிலேயே கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறார்கள்.

இந்த தொடர் கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் புலனாய்வைத் தீவிரப்படுத்தும் அர்ஜூன், அந்த தொடர் கொலைகாரன் அடுத்ததாக யாரைக் கொல்ல திட்டமிட்டு இருக்கிறான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. காரணம், கொலைகாரனின் அடுத்த இலக்கு அர்ஜூன் தான்.

அர்ஜூனை கொல்ல அந்த தொடர் கொலைகாரன் ஏன் முயற்சி செய்கிறான்? அர்ஜூனுக்கும், ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் என்ன தொடர்பு? அந்த தொடர் கொலைகாரன் யார்? அவனை அர்ஜூன் கண்டுபிடித்து கைது செய்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.

‘ஆக்ஷன் கிங்’ என பெயர் வாங்கியிருக்கும் அதிரடி நாயகன் அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்துள்ள 150-வது படம் இது. போலீஸ் அதிகாரி கதாபாத்திரம், அர்ஜூனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த வயதிலும் சுறுசுறுப்பு குறையாமல் அதே விறைப்புடன் அசத்தலாக நடித்திருக்கிறார். புலனாய்வில் அவர் காட்டும் தீவிரம்… ரசனை!

அர்ஜுனின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதன்மை உதவி அதிகாரியாக வரும் பிரசன்னா, தன் கதாபாத்திரம் உணர்ந்து, நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை துணிச்சலுடன் அவர் ஏற்று நடித்து வருவது பாராட்டுக்கு உரியது.

புலனாய்வுக் குழுவின் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். வழக்கமாக உடல் கவர்ச்சியை வெளிக்காட்டும் ‘கிளாமர் நாயகி’ கதாபாத்திரங்களில் நடிக்கும் வரலட்சுமி, வழக்கத்துக்கு மாறாக இதில் நுண்ணறிவை வெளிக்காட்டும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெறுகிறார்.

அர்ஜுனின் மனைவியாக வரும் ஸ்ருதி ஹரிஹரன், ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு உரிய வாழ்நிலையையும், மனநிலையையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

தொடர் கொலைகாரனாக படத்தில் வருபவர் மிரட்டியிருக்கிறார். (அவர் யார் என்பது சஸ்பென்ஸ். அவரை வெள்ளித்திரையில் காண்க.)

தொடர் கொலைகாரனையும், அவனைப் பிடிக்க புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரிகளையும் மையமாக வைத்து, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், விறுவிறுப்பான திரைக்கதையுடன், சுவாரஸ்யமாக காட்சிகளை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் அருண் வைத்யநாதன். கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பு. இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பும் வசீகரமான மேக்கிங், தொடர் கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிக் காப்பது உள்ளிட்ட நேர்த்தியான அம்சங்களால் ரசிகர்களை ஆச்சரியடுத்தி இருக்கிறார் இயக்குனர்.

எஸ்.நவீனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா, கதையோடு சேர்ந்து பயணித்து, காட்சிகளை தெளிவாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.

`நிபுணன்’ – ரசிப்புக்கு உரிய வெற்றியாளன்!