முத்தின கத்திரிக்கா – விமர்சனம்

தமிழ்நாட்டில் சுயபலம் இல்லாமல், கூட்டணிக் கட்சியின் முதுகிலேறி சவாரி செய்யும் ஒரு தேசிய கட்சியையும், அதன் அரசியல்வாதிகளையும் நக்கலடித்து, காங்கிரஸ் என்ற தேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தயாரித்திருக்கும் படம் இது.

பரம்பரை பரம்பரையாக அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வருகிறது நாயகன் சுந்தர்.சியின் குடும்பம். ஆனால், அவருடைய தாத்தாவாலும், அப்பாவாலும் அரசியலில் ஜொலிக்க முடிவதில்லை. இதனால், சுந்தர்.சியின் அம்மா, அவருக்கு அரசியல்வாடையே தெரியாதவாறு வளர்த்து வருகிறார்.

வளர்ந்து பெரியவனாகி, கல்லூரி படிப்பையெல்லாம் முடித்துவிட்டு வெளியே வரும் சுந்தர்.சி. ஒருநாள் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து செல்லும் போது அவருக்கு போலீஸ் முதற்கொண்டு அனைவரும் கொடுக்கும் மரியாதையை கண்டு அரசியலில் களமிறங்க முடிவு செய்கிறார்.

அதன்படி, ஒரு கட்சியில் இணைந்து அந்த ஏரியாவில் தன்னையும் அரசியல்வாதி போல் காட்டிக் கொள்கிறார். இவருடைய கட்சிக்கு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் விடிவி கணேஷும், சிங்கம்புலியும். இவர்கள் இரண்டுபேரும் அண்ணன் தம்பிகள் என்றாலும் இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஊருக்கு நல்லது செய்து விளம்பரமாக்கிக் கொள்ள நினைப்பதை, சுந்தர்.சி நடுவே புகுந்து, தனக்கு விளம்பரமாக்கிக் கொள்கிறார். இதனால், எலியும் பூனையுமாக இருக்கும் அண்ணன், தம்பிகள், சுந்தர்.சியை எதிர்ப்பதில் மட்டும் ஒன்று சேர்ந்து செயல்படுகிறார்கள்.

இந்நிலையில், 40 வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்கும் சுந்தர்.சி., ஒருநாள் வழியில் நாயகி பூனம் பஜ்வாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்னர், அவரை பெண் கேட்டு அவரது வீட்டுக்கும் செல்கிறார். பூனம் பஜ்வாவின் அப்பா ரவிமரியா, சுந்தர்.சி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். தன்னுடன் படித்தவனே தன்னுடைய பெண்ணை பெண் கேட்டு வந்திருக்கிறானே என்று ஆத்திரப்படும் ரவிமரியா, அரசியலில் ஒரு பெரிய புள்ளியாக வந்தால், தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக கூறி சுந்தர்.சியை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

அந்த வேளையில், தேர்தல் நெருங்குகிறது. அதில் சுந்தர்.சி தனது கட்சி தலைமையிடம் கேட்டு ஒரு பதவிக்கு போட்டியிடுகிறார். இறுதியில், வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி இருவரின் எதிர்ப்பையும் மீறி, சுந்தர்.சி., தேர்தலில் வெற்றிபெற்று பூனம் பஜ்வாவை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

சுந்தர்.சி. தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற மாதிரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். காமெடி படம் இயக்கும் இவருக்கு காமெடி வேடத்தில் நடிக்க சொல்லித் தர தேவையில்லை. அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

சதீஷ், நெற்றி நிறைய பட்டை விபூதியுடன் பார்க்கும்போதே சிரிக்க வைக்கிறார். இவர் அவ்வப்போது அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள் காமெடிக்கு உத்தரவாதம். லண்டனில் இருந்து வந்த பையனாக வரும் வைபவ் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். எதிரிகளாக வரும் விடிவி கணேஷ், சிங்கம் புலி இருவரும் வில்லத்தனம் கலந்த காமெடியில் கலகலக்க வைத்திருக்கிறார்கள்.

பூனம் பஜ்வா பார்க்க அழகாக இருக்கிறார். படம் முழுக்க சேலையில் வந்தாலும், அதிலும் சிறிது கவர்ச்சி காட்டி ரசிகர்களை வளைத்து போடுகிறார். யோகிபாபு வரும் காட்சிகள் எல்லாமே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. பூனம் பஜ்வாவின் அம்மாவாக வரும் கிரண் ஒருசில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் ஓகே சொல்ல வைக்கிறார். ரவிமரியாவும் தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் வேங்கட் ராகவன் தன்னுடைய முதல் படத்திலேயே காமெடி என்ற பலமான அஸ்திரத்தை கையாண்டிருக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த ‘வெள்ளிமூங்கா’ படத்தின் ரீமேக் என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார். ஆனால், இதுபோல் முதல் படம் எடுக்கும் இயக்குனர்கள், பிறர் மனம் நோகும்படியான காட்சிகளை வைக்கக் கூடாது என்ற அறிவு சிறிதும் இல்லாமல், தனது மரபணுக் குசும்பைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் வேங்கட் ராகவன். அவர் அடுத்து எப்போது பிரஸ்மீட் வைப்பார் என கேள்விக்கணைகளுடன் காத்திருக்கிறார்கள் பல செய்தியாளர்கள்.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும் பின்னணி இசையை கதைக்கேற்றவாறு அளவாக கொடுத்திருக்கிறார். பானு முருகன் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாகவும், அழகாகவும், கலர்புல்லாகவும் காட்டியிருக்கிறது.

‘முத்தின கத்திரிக்கா’ – முத்தாத ‘கெக்கே… பிக்கே…’!