‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ – விமர்சனம்

சென்னை ராயபுரம் ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ இருக்கிறதோ, என்னவோ…! அங்கே பெரிய தாதாவாக இருப்பவருக்கு “நைனா” என்று பெயர்!!

அப்படி “நைனா”வாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி விட்டதால், தன்னுடைய மகளான ஆனந்தியை திருமணம் செய்பவரை அடுத்த “நைனா” ஆக்க நினைக்கிறார். இதற்காக “அடுத்த நைனா யார்” என்ற தேடல் நடக்கிறது.

இந்த தேடலில் சிக்கும் மிகவும் கோழையான பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி.பிரகாஷை பெரிய ரவுடி என்று தப்பாக நினைத்து மகள் ஆனந்திக்கு திருமணம் செய்து வைக்கிறார் சரவணன்.

ஜி.வி.பிரகாஷ் மிகவும் கோழை என்ற உண்மை சரவணனுக்கு தெரிய வந்ததா? ஜி.வி.பிரகாஷ் அதை எப்படி சமாளித்தார்? என்பது மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய வழக்கமான எரிச்சலூட்டும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியான ஆனந்திக்கு பெரியதாக வேலை இல்லை.  அவ்வப்போது வந்து போகிறார்

கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட சிரிப்பு நடிகர்கள் எப்போதாவது சிரிப்பு காட்டுகிறார்கள். பல காட்சிகளில் காமெடி எடுபடவில்லை.

லாஜிக் இல்லாமல் படம் பயணிக்கிறது. சரவணனின் வலது கையாக இருக்கும் சார்லியை வைத்து சென்டிமென்டை முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் காட்சிகளில் ஆழம் இல்லாததால் அது சொதப்பலில் முடிகிறது.

ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ படத்தின் பிரபலமான வசனமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற வசனத்தை இப்படத்துக்கு தலைப்பாக வைத்து கேவலப்படுத்தியிருக்கிறார்கள். மேலும், ‘பாகுபலி’, ‘வேதாளம்’, ‘துப்பாக்கி’யில் தொடங்கி கடைசியாக ‘கபாலி’ வரைக்கும் புகழ்பெற்ற பல வசனங்களை தப்பாக பயன்படுத்தி நாறடித்திருக்கிறார்கள். இது போதாதென்று, முகம் சுழிக்க வைக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் – படம் முழுக்க! முடியல!!

ஜி.வி.பிரகாஷ் இசை எடுபடவில்லை. பாடல்கள் யாவும் படத்தோடு ஒட்டாமலே இருக்கின்றன. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்துக்கு எந்த பலத்தையும் கொடுக்கவில்லை. பாடல்கள் இடை செருகலாகவே இருந்தன.

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ – படு சொதப்பலா இருக்கு!