நோஞ்சான் தேசம்: போரில் தோற்றது மோடியின் இந்தியா!

எதுகை மோனை எஃபெக்டில் பேச்சுப் போட்டி வைத்தால், மோடியை வெல்லும் திறன் டி.ராஜேந்தருக்கு கூட கிடையாது. கோழிக்கோட்டில் பேசும்போது, “பாக்குடன் போருக்குத் தயார், ஆனால் அந்தப் போர் வறுமை, வேலையின்மை, சத்துக் குறைவு ஆகியவற்றில் நடக்கும்” என்று சவால் விட்டார் மோடி. ‘பரவாயில்லையே, ஆரோக்கியமான போட்டிதானே’ என்று இது பாகிஸ்தான் ஊடகங்களிலும் ஒலித்தது.

ஆனாலும் உண்மை வலியது அல்லவா! மோடியின் கெட்ட நேரம் பார்த்து ஒரு புள்ளிவிவரம் வெளியே வந்திருக்கிறது – இது புதிதல்ல என்றாலும். அமெரிக்காவின் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டிருக்கும் உலக பட்டினி அட்டவணையில் இந்தியா, பாக் இரு நாடுகளுமே ஆசியக் கண்டத்தின் கடைசி இடங்களில் தள்ளப்பட்டுள்ளன.

இந்த அட்டவணையில் 2016-ம் ஆண்டு நிலவரப்படி 118 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 97-ம் இடத்தையும், பாகிஸ்தான் 107-ம் இடத்தையும் பெற்றிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் தேஷபக்தர்கள் கரித்துக் கொட்டும் சீன தேசம் 27-ம் இடத்திலும், நேபாளம் 72, மியன்மார் 75, இலங்கை 84, வங்கதேசம் 90 என்றும் இருக்கின்றன.

இந்த அறிக்கையின்படி, வளரும் நாடுகளின் உலக பட்டினி அட்டவணையின் கூட்டு சராசரி எண் 21.3 ஆகும். அதாவது, இந்த எண் குறையக் குறைய அந்தந்த நாடுகள் சிறப்பாக சமூக நலத்தைக் கொண்டிருக்கின்றன என்று பொருள். அதன்படி பிரேசில், அர்ஜெண்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகள் சுமார் 16 அளவிலான கூட்டு எண்ணைப் பெற்று வளரும் நாடுகளின் முன்னணி இடத்தை பெற்றிருக்கின்றன. இந்தியாவோ  சராசரியையும் விட அதிகமாகி 28.5 எண் பெற்று கடைசி இடங்களுக்கு போட்டி போடுகிறது. தென் அமெரிக்காவிலேயே சிலி, மத்திய அமெரிக்க குடியரசு நாடு இரண்டும் முறையே 44.3, 46.1 பெற்றிருக்கின்றன.

உலக பட்டினி அட்டவணை என்பது ஒரு நாட்டின் வறுமை குறித்த நிலையை புள்ளிவிவரங்கள் கொண்டு ஆய்வு செய்து முன்வைக்கிறது. மேலும், கடந்த வருட நிலையை கருத்தில் கொண்டு இந்த வருடம் பட்டினி நிலையை எதிர்த்து அந்த நாடு என்ன செய்திருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்கிறது. கூடவே, குறிப்பான பிரச்சினைகள் குறித்தும் எடுத்து வைக்கிறது.

இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் 15.2 சதவீத மக்கள் போதுமான உணவு இன்றி பட்டினி கிடப்பதும், ஐந்து வயதுக்கும் கீழே உள்ள குழந்தைகளில் 38.7 சதவீதம் பேர் சத்துணவு இன்றி பலவீனமாக இருப்பதும் தெரியவருகிறது. இதையே உரைக்கும்படி சொன்னால், தோராயமாக ஏழு இந்தியர்களில் ஒருவர் பட்டினி கிடக்கிறார்; ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் பேர் சத்துணவு இன்றி ஏதோ உண்டு வாழ்கின்றனர்.

ஐக்கிய நாடு சபையின் வருடாந்திர அறிக்கையின்படி, 2014-15 ம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பட்டினியில் வாடும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியாதான். அதாவது, இந்தியாவில் 19 கோடி மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். சீனாவில் பட்டினியால் வாடும் 13 கோடி மக்களை சேர்த்துப் பார்த்தாலும், உலக அளவில் பட்டினியில் வாடும் நான்கு பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்.

இந்தியாவின் வேலையின்மை நிலவரத்தை எடுத்துக் கொள்வோம். 2013-14 ஆண்டில் அரசின் அறிக்கைப்படி வேலையின்மை விகிதம்  கிட்டத்தட்ட ஐந்து சதவீதம். அதே நேரம் இந்தியக் குடும்பங்களில் 77 சதவீதக் குடும்பங்களுக்கு முறையான வேலையோ, வருமானமோ கிடையாது.

இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நாம் பட்டினியில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் புரியும். உலக வங்கியின் அறிக்கைப்படி இந்தியாவில் தானியங்கி மாற்றம் எனப்படும் ஆட்டோமேசன் அமலுக்கு வரும்போது பல துறைகளில் பாதிக்கும் மேற்பட்ட வேலைகள் அழிக்கப்படும். இத்தகைய மாற்றங்கள் நடக்கும் வளரும் நாடுகளில் இதன் பாதிப்பு வளர்ந்த நாடுகளை விட பல மடங்கு அதிகம்.

ஐ.நா-வின் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆசிய-பசிபிக் மனித வளத்துறை அறிக்கையை பார்ப்போம். இதன்படி 1991 முதல் 2013 வரை வேலைதேடி வந்த புதியவர்களில் இந்தியா அளித்த வேலை எத்தனை பேருக்கு? ‘பாதிக்கும் குறைவாகத்தான்’ என்கிறது அந்த அறிக்கை. இந்தக் காலத்தில் வேலை செய்யும் திறன் கொண்டோர் முப்பது கோடியாக இருக்கும்போது வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை 14 கோடி மட்டுமே.

ஆக, ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் “மோடியின் டிஜிட்டல் இந்தியாவை சாதிப்போம்” என முகேஷ் அம்பானி சவால் விடுகிறார். மோடியோ, “பாக்கை வறுமைப் போரில் வெல்வோம்” என்று சவடால் விடுகிறார். இறுதியில், இவர்களது டிஜிட்டல் வெத்து வேட்டுக்கள் தொட முடியாத தூரத்தில் இருக்கும்  சாதாரண மக்கள் பட்டினியிலும், வேலையின்மையிலும் தவிக்கிறார்கள்.

நம்மைவிட பாகிஸ்தான் மேலும் பின்னணியில் இருக்கிறதே என்று சில தேஷபக்தர்கள் கேட்கலாம். அப்படி என்றால், நம்மை விட மியன்மார், இலங்கை, நேபாளம் கூட முன்னணியில் இருக்கிறது. சீனாவோ நினைத்துப் பார்க்க முடியாத முன்னணியில் இருக்கிறது. ஆகவே சீனாவை தொழுவார்களா?

“எல்லையில் இராணுவ வீரர்கள் சாகிறார்கள்” என்று நாட்டுக்குள்ளே மாளிகைகளில் பாதுகாப்பாக வாழும் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள் முதலைக் கண்ணீர் விடுகிறார்கள். இவர்களது மாளிகைகளின் கீழே வாழும் இந்திய மக்களில்  கணிசமானோர் பட்டினியிலும், ஊட்டச் சத்துக் குறைவிலும் மெல்ல மெல்ல சாகிறார்கள். அதானிக்கும், அம்பானிக்கும் தரகர் வேலை பார்க்கும் மோடி அரசில் வேலையற்றோர் பட்டாளம் பெருகி வருகிறது.

எனவே, போர் பாக்குடன் அல்ல! வறுமையை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் மோடி, பா.ஜ.க உள்ளிட்ட இந்திய ஆளும் வர்க்கங்களுடன்தான் சண்டை போட வேண்டும்!

இராசவேல்

Courtesy: vinavu.com