ஆளுநர்கள் மூலம் தனியரசு நடத்துகிறது மோடி அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிதைத்து – ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கினைக் கைவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதுச்சேரி மாநில ஆளுநராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றி பொதுத்தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சிறிதும் மதிக்காமல், துச்சமென எண்ணிச் செயல்படுகிறார்.

புதுச்சேரி முதல்வர் தலைமையிலான ஜனநாயக அரசைக் கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசும் – துணைநிலை ஆளுநரும் கைகோர்த்துக் கொண்டு, புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பதும் அரசியல் சட்டத்தின் மாண்புகளை குழி தோண்டிப் புதைக்கும் மாபாதகச் செயலாகவும், கூட்டாட்சித் தத்துவத்தை கேலிக்கூத்தாக்கும் தரம் தாழ்ந்தப் போக்காகவும் அமைந்திருக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர், அக்கட்சியில் உள்ள மாநிலப் பொருளாளர், இன்னொரு தனியார் பள்ளி நிர்வாகி என்று பாஜகவில் உள்ளவர்களையும், அந்தக் கட்சியின் துணை அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களுமான மூன்று பேரை புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள தார்மீக உரிமையையும், புதுச்சேரி மாநிலத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தையும் தட்டிப் பறிக்கும் செயலில் மாநிலத்தின் நிர்வாகியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கிரண்பேடியும், மத்திய அரசும் சதித் திட்டமிட்டுச் செயல்படுவது, சட்டமன்ற ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய அறைகூவலாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கிறது.

நேர்மையாளராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் புதுவை ஆளுநர், கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவரை சட்டமன்ற உறுப்பினராக நியமிக்க, தனக்கு இல்லாத அதிகாரத்தை அவசரமாக பிரயோகம்செய்து, ரகசியமாக பதவிப்பிரமாணமும் செய்து வைத்திருப்பது, ஆளுநர் பதவியில் அமர்ந்து மத்தியில் உள்ள பாஜக அரசின் முழுநேர ஏஜெண்டாக மிகத்தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்ற அருவெறுக்கத்தக்க குற்றச்சாட்டை வெளிச்சம் போட்டு, உண்மையாக்கி விட்டது.

புதுச்சேரி சட்டமன்ற விதிகளை உருவாக்க சபாநாயகருடன் கலந்து பேசித்தான், அந்த மாநிலத்தின் ஆளுநர் முடிவு எடுக்க முடியும். மாநில சட்டமன்றத்திற்கு ஒரு செய்தி அனுப்ப வேண்டும் என்றால் கூட அதனைப் பேரவைத்தலைவர் அல்லது அமைச்சர் மூலமாகத்தான் ஆளுநர் அனுப்ப முடியும். விருப்ப அதிகாரம், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய நிர்வாக நடைமுறைகள், தவிர மாநிலம் தொடர்புடைய மற்ற அனைத்து நிர்வாக நடைமுறைகளிலும் அமைச்சரவையின் ஆலோசனைகளைப் பெற்றுத்தான் நிர்வாகி செயல்பட வேண்டும்.

எல்லாவற்றையும் விட. புதுச்சேரியில் சட்டமன்றமும் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் இருக்கும்போது, குடியரசுத் தலைவர் நியமித்துள்ள ஆளுநரோ அல்லது மத்திய அரசோ அம்மாநில விவகாரங்களில் தலையிடுவதே அரசியல் சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் மீறி அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டிய ஆளுநர் தனக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் இருப்பதுபோல் வீண் கற்பனை செய்துகொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது, அவரது கோரமான அதிகாரப் பசியை வெளிக்காட்டுகிறதே தவிர, அரசியல் நாகரிகத்தைக் கிஞ்சிற்றும் காட்டவில்லை. அதுமட்டுமின்றி, புதுவை மாநில மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துக் கொச்சைப்படுத்தும் இந்தச் செயலை யாராலும், குறிப்பாக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு உள்ளவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது.

புதுச்சேரி விவகாரம் இப்படியென்றால், மேற்கு வங்க ஆளுநர் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மிரட்டுகின்ற பாணியில் தொலைபேசியில் அநாகரிகமான வார்த்தைகளைப் பேசி இருப்பதையும், யாராலும் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியாது. ஒரு முதல்வருடன் கண்ணியமாகப் பேசத் தெரியாத நயத்தக்க நாகரிகம் அறியாத ஒருவரை ஆளுநராக நியமித்ததன் மூலம், மேற்குவங்கத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலையை பாஜகவே திணித்திருக்கிறது என்றே எண்ண வேண்டியதிருக்கிறது.

அதேபோல், டெல்லியில் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை செயல்பட விடாமல் மத்தியில் உள்ள பாஜக அரசு முடக்கி, தடுப்பது ஜனநாயக நாட்டில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஆளுநர்கள் நியமிக்கப்படுபவர்கள். முதல்வகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என்ற அடிப்படை மக்களாட்சிக் கோட்பாட்டை மத்தியில் உள்ள பாஜக அரசு மறந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களுக்கு தீராத நெருக்கடி கொடுப்பதையும், அங்கு நடைபெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளுக்கு தினமும் தொல்லை கொடுத்து, நிர்வாகத்தைச் சிதைத்துச் சீர்குலைப்பதையும் கைவந்த கலையாகச் செய்து வருவது கவலைக்குரியது.

பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்குள்ள ஆளுநரை மாற்ற வேண்டும் என்று ஒரு யுத்தமே நடத்தினார். அப்போது அவர், ‘ராஜ்பவன்களை வைத்து மாநிலத்தை ஆள நினைக்கிறது மத்திய அரசு. ராஜ்பவன்கள் மூலம் கொல்லைப்புற வழியாக நுழைந்து இன்னொரு தனி அரசாங்கத்தை மாநிலத்தில் நடத்துகிறது. இரு அரசாங்கம் ஒரு மாநிலத்தில் செயல்பட்டால் மக்கள் எங்கே போவார்கள்’ என்று ஆவேசமாக மாநில உரிமைகள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

ஆனால், அந்த குஜராத் முதல்வர் இன்றைக்குப் பிரதமரான பிறகு கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற முழக்கத்தை முன் வைத்து, மாநிலங்களின் அதிகாரத்தை கொத்துக் கொத்தாக பறித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்பது மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. முதல்வராக இருந்தபோது, மாநிலங்களுக்கு உரிமை வேண்டும் என்றவர், இன்றைக்குப் பிரதமரனாதும் மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிப்பதும், ஆளுநர்களை வைத்து மாநிலங்களில் தனி அரசாங்கம் நடத்துவதும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதும் – முரணானதும் ஆகும்.

உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கை கொடுப்போம் என்று மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழ்நிலையை நீண்ட நெடுங்காலமாக கடைபிடித்து வருகின்றன. ஆனால் அந்த உயர்ந்த சிந்தனையை, நாட்டுப்பற்று மிக்க மாநிலங்களின் நோக்கத்தை இது போன்று ஆளுநர்கள் மூலம் தனி அரசாங்கம் நடத்தி மத்தியில் உள்ள பாஜக அரசு சிதைக்க முயற்சிப்பது வருத்தத்திற்குரியது.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் திமுகவின் நெடுநாளைய முழக்கம். அதற்காகவே மத்திய – மாநில உறவுகள் குறித்து ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராஜமன்னார் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானமே நிறைவேற்றிய அரசு திமுக அரசு என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆனால் இன்றைக்கு ஒரே நாடு, ஒரே வரி, ஒரே நாடு, ஒரே கல்வி என்று மாநிலங்களிடம் உள்ள ஒவ்வொரு அதிகாரத்தையும் பறித்துக் கொள்ளும் மத்திய பாஜக அரசு, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில், புதிய குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலங்கள் ஏதோ மாநகராட்சிகள் போல், ஏன் அதற்கும் கீழ் முனிசிபாலிட்டிகள் போன்ற நிலைக்குத் தள்ளப்படுவது, மத்திய – மாநில அரசு அதிகாரங்களில், கவலைப்படும் ஒரு அத்தியாயத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

அரசியல் சட்டத்தில் மத்திய அரசும், மாநிலமும் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த பொதுப்பட்டியல் நாளடைவில் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு பட்டியல் மட்டுமே மிஞ்சி, மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலும் சுருங்கி விடுமோ என்ற மாபெரும் கவலை அனைத்து மாநில அரசுகளுக்குமே இப்போது ஏற்பட்டிருக்கிறது.

மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் மத்தியில் உள்ள பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளால், மத்திய – மாநில உறவு குறித்து ஆராய இன்னொரு கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டிய காலகட்டம் மாநிலங்களுக்கு வந்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ராஜ்பவன்களில் இருக்கும் ஆளுநர்களின் செயல்பாடுகளும் ஆட்டுக்கு தாடி தேவையில்லை என்பது போல் நாட்டுக்கு ஏன் கவர்னர் என்ற கேள்வியையும் மீண்டும் எழுப்புகிறது. ஆகவே மத்தியில் உள்ள பாஜக அரசு மாநிலங்களில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மதிக்க வேண்டும் என்றும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில அரசின் அதிகாரங்களில் எதேச்சதிகாரமாக அத்துமீறல் செய்து ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், ஆளுநர் நியமனங்களில் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி, மேற்குவங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில், ராஜ்பவனை வைத்து மாநிலத்திற்குள் ஒரு தனி அரசாங்கம் நடத்தும் போக்கை உடனடியாகக் கைவிட்டு, மத்திய – மாநில உறவுகள் நலிவடைந்து விடாமல் செழுமைப்படுத்திட மத்திய அரசு உதவிட வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்