புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சரவை பதவி ஏற்றது!

தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.37 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜலட்சுமி, வளர்மதி உள்ளிட்ட 30 அமைச்சர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து, கோரஸ் முறையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி 20 நிமிடங்களில் நிறைவடைந்தது.

முன்னதாக, அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் இன்று காலை அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் எடப்பாடி பழனிச்சாமியும், அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

0a1e

இந்த அமைச்சரவையில் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள கே.பாண்டியராஜன் வகித்த பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டது. மற்ற அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வந்த உள்துறை, காவல், நிதி ஆகிய துறைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார். ஓபிஎஸ் முதல்வராக இருக்கும்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலை, பொதுப்பணி ஆகிய துறைகள் தற்போதும் முதல்வர் பழனிசாமியிடமே உள்ளன.

தமிழகத்தில் கடந்த 10 மாதத்தில் 3-வது முதல்வர் பதவியேற்று இருப்பதும், புதிய முதல்வர் 15 நாட்களுக்குள் சட்டபேரவையை கூட்டி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.