கருணாநிதியை நேரில் பார்த்தார் ராகுல் காந்தி: புகைப்படம் வெளியீடு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று (31-07-2018) மாலை 3.30 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவருடன் தமிழக காங்கிரசுக்குப் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் வந்தனர்.

ராகுல்காந்தியை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் மருத்துவமனை உள்ளே அழைத்துச் சென்றனர். கருணாநிதி இருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் சென்ற ராகுல்காந்தி, கருணாநிதியை நேரில் பார்த்தார். ராகுல் காந்தி வந்திருக்கும் தகவலை கருணாநிதியின் காதருகில் ஸ்டாலின் தெரிவித்தார். இத்தகவலை கருணாநிதி செவிமடுத்து, உள்வாங்கிக்கொண்டார்.

பின்னர் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் ஸ்டாலின், கனிமொழி மற்றும் மருத்துவர்களிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

இதன்பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கருணாநிதியை சந்திப்பதற்காக வந்தேன். அவர் உறுதியான மனிதர். தமிழகத்தின் உயிர்ப்பை அவர் கொண்டிருக்கிறார். நான் அவரை நேரில் பார்த்தேன். அவரது உடல்நிலை சீராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி குணமடைய சோனியாகாந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்” என்றார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி விடை பெற்றுச் சென்ற பிறகு, திமுக சார்பில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதியின் படுக்கை அருகே ராகுல் காந்தி நின்றுகொண்டிருக்க, அவர் வந்துள்ள தகவலை கருணாநிதியின் காதருகில் ஸ்டாலின் சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

கருணாநிதி செயற்கை சுவாசக் கருவியின்றி, இயற்கையாக சுவாசித்து, சீரான உடல்நிலையில் இருக்கிறார் என்பதை நம்ப மறுப்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த புகைப்படம் அமைந்திருக்கிறது. இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால், திமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.