கருணாநிதி உடல்நிலை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிய நா.த.க. நிர்வாகி கைது; சிறையில் அடைப்பு

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி முதுமைக்கால உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் இருந்துவரும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உட்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நிர்வாகிகளும் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் சிலர் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், அவரைப் பற்றியும் அநாகரிகமாகவும், அவதூறாகவும் பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு அவதூறு பரப்புகிறவர்களில், சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட சீமான், இவ்வாறு பதிவிடும் நபர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்து கண்டித்திருந்தார். அத்துடன், அவரே நேரில் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு, ‘கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்’ என்ற தன் விருப்பத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன்பிறகும் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் பகுதி அமைப்பாளராக பதவி வகிக்கும், வேலூர் மாவட்டம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த தீனதயாளன் என்பவர் தனது முகநூலில், கருணாநிதி குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் அவதூறு பரப்பி வந்துள்ளார். இது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரை பெற்ற போலீஸார் தீனதயாளனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.