ஜுங்கா – விமர்சனம்

ரபேல் போர்விமான ஒப்பந்தம் பற்றி கேள்வி எழுப்பும்போதெல்லாம், “அது பற்றி வெளியே சொல்ல முடியாது. சொன்னால் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்து” என்று நரேந்திர மோடி அரசாங்கம் பூச்சாண்டி காட்டி தப்பித்து வருகிறதல்லவா? அதுபோல, “ஜுங்கா’ என்றால் என்ன? அதை ஏன் படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டபோதெல்லாம், “அது பற்றி இப்போது சொல்ல முடியாது. படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்” என்று பில்டப் கொடுத்து நழுவிவந்தது படக்குழு. படத்தைப் பார்த்தபோது தெரிந்தது, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர் தான் ஜுங்கா. ஏன் இப்படியொரு விசித்திரமான பெயர் என்றால், “அவரது தாத்தா பெயர் லிங்கா, அப்பா பெயர் ரங்கா, அதனால் அவர் பெயர் ஜுங்கா” என்று விளக்கம் தந்திருக்கிறார்கள். இதை தவிர ஜுங்கா என்ற சொல்லுக்கு படத்தில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை.

அப்பா காலத்தில் ஒரு பணக்காரனின் கைக்குப் போய்விட்ட குடும்பச் சொத்தை மீண்டும் வசப்படுத்த முயற்சி செய்கிறான் நாயகன் என்பது இப்படத்தின் ஒருவரிக் கதை. இந்த ஒருவரிக் கதையில் புதுமை எதுவும் இல்லை என்றபோதிலும், இதை டார்க் காமெடி ரக தாதா கதையாக வளர்த்தெடுத்து, நாயகனை கஞ்சத்தனமான தாதாவாக வடிவமைத்து, இவற்றின்மூலம் நிறைய சுவாரஸ்யங்களை அள்ளித் தெளித்து, ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

j7

நாயகன் ஜுங்காவின் தாத்தா லிங்காவும், அப்பா ரங்காவும் அரைவேக்காட்டுத்தனமான ஊதாரி தாதாக்கள். அவர்கள் வெட்டியாய் பந்தா காட்டுவதற்காக பணத்தை வாரி இறைத்து வீணாக செலவழித்து, ஓட்டாண்டி ஆகிறார்கள். விளைவாக, ஜுங்காவின் அம்மா (சரண்யா பொன்வண்ணன்) கொண்டுவந்த பரம்பரைச் சொத்தான ‘சினிமா பாரடைஸ்’ என்ற திரையரங்கை ஒரு பணக்கார செட்டியாரிடம் (சுரேஷ் மேனன்) இழக்கிறார்கள்.

அவர்களைப் போல் ஜுங்காவும் தாதாவாகி நாறிவிடக் கூடாது என்று நினைக்கும் ஜுங்காவின் அம்மா, இந்த முன்கதை தெரியாதவாறு மகனை வளர்த்து ஆளாக்குகிறார். ஜுங்கா பஸ் கண்டக்டர் ஆகிறார். ஒருகட்டத்தில் முன்கதையைத் தெரிந்துகொள்ளும் ஜுங்கா, தாத்தாவும், அப்பாவும் தோற்ற தாதா தொழிலில் ஈடுபட்டு, அவர்கள் இழந்த திரையரங்கை மீட்பேன் என உறுதி கொள்கிறார். இதற்காக ஜுங்கா, தன் முன்னோர்களைப் போல் ஊதாரி தாதாவாக இல்லாமல், கடைந்தெடுத்த கஞ்சத்தனமான தாதாவாக மாறி நடத்தும் கூத்துக்களும், அவற்றின் விளைவுகளும் தான் இப்படத்தின் மீதிக்கதை.

கஞ்சத்தனமான தாதா கதாபாத்திரத்தில் வந்து கலக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. படத்துக்குப் படம் அவர் வித்தியாசம் காட்டுவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இந்தப் படத்தில் பலவித கெட்டப்புகளில் தோன்றி, சற்று வித்தியாசமான மாடுலேஷனில் வசனம் பேசி, காமெடி பண்ணி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளியிருக்கிறார்.

படம் முழுக்க விஜய் சேதுபதியுடன் பயணிக்கும் யோகிபாபு, காமெடிக்கு உறுதுணையாக இருந்து பல இடங்கள்ல் சிரிக்க வைக்கிறார். விஜய் சேதுபதியின் கஞ்சத்தனம் ஒவ்வொன்றையும்  பார்த்து அவர் மிரளுகிற காட்சிகளில் திரையரங்கம் சிரிப்பில் அதிருகிறது.

j1

அழகுப் பதுமையாய் வரும் நாயகி சாயிஷா பாடல் காட்சிகளிலும், நடன அசைவுகளிலும் அசத்தியிருக்கிறார். தெலுங்கு பேசும் பெண் கதாபாத்திரத்தில் வரும் இன்னொரு நாயகி மடோனா செபாஸ்டியன் சில காட்சிகளே வந்தாலும், தனக்கே உரிய முத்திரையை பதித்திருக்கிறார்.

சென்னைத் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். வில்லன் சுரேஷ் மேனனிடம் பஞ்ச் வசனம் பேசி கெத்து காட்டுகிற இடத்தில் 87 வயது விஜயா பாட்டி ஸ்கோர் செய்திருக்கிறார். ராதாரவி சில காட்சிகளே வந்தாலும் அனுபவ நடிப்பை அளவாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ வெற்றிப்படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். டார்க் காமெடி இவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. எனினும், முதல் பாதியில் இருந்த வேகமும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் குறைந்துவிடுகிறது. திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அதுபோல் 2 மணி 37 நிமிட படத்தின் நீளத்தை நறுக்கிக் குறைத்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான் என்றாலும், தாதா படத்துக்குரிய பின்னணி இசையை நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறார். டூட்லியின் காமிரா பாரிஸ் நகர அழகை அள்ளிக்கொண்டு வந்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

‘ஜுங்கா’ – பார்த்து ரசித்து சிரிக்கலாம்!