ஈஸ்வரன் – விமர்சனம்

பாரதிராஜாவுக்கு உறுதுணையாக இருக்கும் சிம்பு, அவர் குடும்பத்தை ஆபத்துகளில் இருந்து காக்கப் போராடினால் அதுவே ‘ஈஸ்வரன்’.

வரும் பௌர்ணமிக்குள் பாரதிராஜாவின் குடும்பத்தில் ஒரு உயிர் பலி நடந்தே தீரும் என்று சோழிகளை உருட்டி ஆருடம் சொல்கிறார் காளி வெங்கட். ஏற்கெனவே இதுபோன்று ஜோசியம் சொன்னதும் பலித்ததால் அந்தக் குடும்பமே அரண்டு போகிறது. இந்தச் சூழலில் பெரிய குடும்பத்தின் மொத்த உயிர்களையும் பலிவாங்கும் நோக்கத்தில் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வருகிறார் ‘ஸ்டன்’சிவா. இன்னொரு பக்கம் சொத்துக்காக பாரதிராஜாவைப் போட்டுத் தள்ள அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒருவரே சதி செய்கிறார். இந்த மும்முனைச் சிக்கலில் ஒரு உயிரும் பறிபோக விடமாட்டேன் என்று சபதம் எடுத்துப் போராடுகிறார் சிம்பு.

சிம்புவுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் அப்படி என்ன சம்பந்தம், சொந்தக் குடும்பத்துக்கே துரோகம் செய்பவர் யார், ஸ்டன் சிவா ஏன் பழிதீர்க்க நினைக்கிறார், ஜோசியம் பலித்ததா என்பதே மீதிக் கதை.

இடைவெளி இல்லாமல் படம் இயக்குவதில் சுசீந்திரனின் வேகம் சொல்லி மாளாது. 11 வருடங்களில் 13 படங்களைப் படபடவென முடித்துவிட்டார். ‘ஈஸ்வரன்’அவரது 14-வது படம். சிம்புவை வைத்துப் படமா என அதிர்ச்சி அடைந்த சினிமா உலகத்தையே ஆஹா என்று ஆச்சர்யப்படுத்தும் அளவுக்குக் குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் செய்துவிட்டார். அந்தவகையில் அவரது வேகத்தை வரவேற்கலாம். ஆனால், இந்த வேகம் படத்தின் தரத்தில் சமரசம் செய்வதாக இருப்பதுதான் சோகம்.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’படத்துக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது. 30 கிலோ உடல் எடையைக் குறைத்து, மெலிந்து, கட்டுக்கோப்பான உடல் வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் இளமையாகத் தெரிகிறார். மில்லி மீட்டர் அளவில் சிரிப்பவர் இப்போது சென்டிமீட்டர் அளவில் சிரித்துத் தள்ளுகிறார். கெத்துதான் என் சொத்து என பில்டப் காட்சிகளில் ஈடு செய்கிறார். புத்துணர்ச்சி குறைந்த அளவில் மட்டுமே எட்டிப் பார்க்கிறது. விரலில் வித்தை காட்டியவர் இப்போது அதே விரலை வைத்து சொடக்கு போடுகிறார். அவரது கம்பேக் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், நடிப்பு, டான்ஸ், ஃபைட், பன்ச் என்ற ஃபார்முலாவுக்குள் தன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

நந்திதா, நிதி அகர்வால் என இரு நாயகிகள். நந்திதாவுக்கு முக்கியத்துவம் இல்லை. அவரை விட நிதி அகர்வாலுக்கு ஓரிரு காட்சிகளே அதிகம். அதுவும், விலகி விலகிப் போகும் சிம்புவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் டெம்ப்ளேட் நாயகி பாத்திரம்தான். அக்காவைப் பொறாமை கொள்ளவைக்கும் நாயகி பாத்திரம் என்று இல்லாத நியாயத்தை நிறுவப் பார்த்திருக்கிறார்கள். அது எடுபடவில்லை. சிம்பு- நிதி அகர்வால் காதல் காட்சிகளும் புதுமையாக இல்லை.

பாரதிராஜா படத்தின் முக்கிய பலம். பெரியசாமி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சிம்பு யார் என்பது தெரிந்த பிறகு அவரிடம் தென்படும் உணர்வுகளில் மட்டும் கொஞ்சம் போதாமை நிலவுகிறது. மற்றபடி தொடர்ந்து பாரதிராஜாவின் நடிப்புக் கலையை வெளிக்கொணர்வதில் இயக்குநர் சுசீந்திரனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவரது கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் அழுத்தமாக உள்ளது. இதனாலேயே நாயகனைத் தாண்டியும் பாரதிராஜா மனதில் நிற்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலசரவணன் நகைச்சுவை, குணச்சித்திரம் கலந்த நடிப்பில் மிளிர்கிறார். காளி வெங்கட், அருள்தாஸ், முனீஷ்காந்த் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். ‘ஸ்டன்’ சிவாவுக்கு ஓவர் பில்டப்புகள். வினோதினி, மனோஜ் பாரதி, ‘யார்’கண்ணன், ஹரீஷ் உத்தமன ஆகியோரும் படத்தில் வந்து போகிறார்கள்.

தமனின் இசையில் டைட்டில் டிராக்கும், தமிழன் பாட்டும் ஓகே ரகம். பின்னணி இசையில் இரைச்சல் அதிகம். திருவின் ஒளிப்பதிவு பசுமை நிறைந்த கணக்கன் பட்டி கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஆண்டனியின் எடிட்டிங் கச்சிதம்.

கதையை நகர்த்துவதற்கு சுசீந்திரன் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். கரோனா காலத்தில் நடக்கும் கதை என்று சமகால அச்சுறுத்தலைக் கதைக்குள் கொண்டுவந்த பிறகும் காமெடி என்கிற பெயரில் எதையோ இட்டு நிரப்பியிருக்கிறார்கள்.

சொத்துப் பிரச்சினை, அண்ணன் – தங்கை சண்டை ஆகியவற்றிலும் யதார்த்தம் இல்லை. பாரதிராஜாவின் மகன், பேத்திகளுக்கு இடையேயான வயது வித்தியாசம் லாஜிக் பிழை. படமாக்கும் விதத்தில் பல காட்சிகளில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார். பார்வையாளர்களைத் திருப்தி செய்யும் விதத்தில் சுவாரஸ்யமான காட்சிகளோ, திருப்புமுனைகளோ படத்தில் இல்லை. கதாபாத்திரங்களுக்கான சவால்களும் பெரிய அளவில் இல்லை.

முழுக்க முழுக்க சிம்புவுக்கான பில்டப் காட்சிகளை ஏற்றி இருக்கிறார்கள். ஓப்பனிங் காட்சியை வைத்த பிறகும் ஃபிளாஷ்பேக்கில் ஒரு அறிமுகப் பாடல் வைப்பதெல்லாம் எதில் சேர்த்தி என்றே தெரியவில்லை. எல்லோரும் ஊறவைத்து, அடித்துத் துவைத்த பழைய கதையை அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து சட்னி செய்திருக்கிறார். இதை ருசிக்க முடியவில்லை. வேடிக்கை மட்டும் பார்க்க முடிகிறது.