“கருணாநிதி இன்னும் சிறிது காலம் தங்கி சிகிச்சை பெற வேண்டும்”: மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் சென்னை காவேரி மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் இன்று (31-07-2018) மாலை 6.30 மணிக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 28ஆம் தேதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அடங்கிய குழு கவனித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் நன்றாக ஒத்துழைக்கிறது.

கல்லீரல் மற்றும் ரத்தம் சம்பந்தமாக அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. இதனால் இன்னும் சிறிது காலம் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0a1i