“பாபி சிம்ஹாவின் ‘மெட்ரோ’ படத்தில் எத்தனை ‘பிட்டு’ காட்சிகள்?”

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சிரிஷ், சென்ட்ராயன், நிஷாந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெட்ரோ’. ஜோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஜெயகிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். காஸ்மோ வில்லேஜ் நிறுவனம் இப்படத்தை ஜூன் 24ஆம் தேதி வெளியிடவுள்ளது.

இப்படத்துக்கு தணிக்கைக் குழுவினர் எந்த வகையில் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார்கள், எப்படி தணிக்கை செய்யப்பட்டது, தணிக்கையில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பவை பற்றி இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறியதாவது:

ஏப்ரல் 1ஆம் தேதி இப்படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்தார்கள். ஏப்ரல் 1ஆம் தேதி அனைவருமே மற்றவர்களை ஏமாற்றுவார்கள். ஆனால், அன்றைய தினம் உண்மையில் என்னை தணிக்கைக் குழு ஏமாற்றிவிட்டது.

இப்படத்தின் கதைக்களத்திற்கு ‘U’ கிடைக்காது. ‘U/A’ அல்லது ‘A’ கிடைக்கும் என்று படத்தின் ஆரம்பப் புள்ளியிலேயே தெரியும். அதனால் தான் முதலிலேயே ‘மெட்ரோ’ என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தேன். ஆனால், தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் கொடுக்க மறுப்பார்கள் என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.

அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. “செயின் பறிக்க சொல்லி தருகிறீர்கள்” என்று பல்வேறு காரணங்கள் சொன்னார்கள். ஒரு படத்தில் எந்தவொரு பாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்தாலும், அதனுடைய பின்புலத்தை தெளிவாக சொல்ல வேண்டும். கதையை நகர்த்துவதற்கு செயின் பறிப்பை உபயோகப்படுத்தி இருக்கிறேன். அப்படி இருக்கும்போது, செயின் பறிப்பு எப்படி நடக்கிறது, எதற்காக நடக்கிறது, அதை பண்ணுபவர்களின் மனநிலை என்ன, அவர்கள் எப்படி திட்டமிடுவார்கள் போன்ற காட்சிகளை எல்லாம் வைத்தால் மட்டுமே அவர்கள் எவ்வளவு தைரியமாக பண்ணுகிறார்கள் என்பதை சொல்ல முடியும். அதை நான் வெறும் செயின் பறிப்பு என்று காட்டிவிட்டு போனால், ஏன், எதற்காக போன்ற கேள்விகள் எழும். அதற்கு YOUTUBE வீடியோக்களே நிறைய இருக்கிறது. இப்படத்தை பார்க்கும்போது, நாம் வெளியே போகும்போது எவ்வளவு பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு வரும்.

இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர். அதனால் நான் க்ரைம் மற்றும் த்ரில்லர் இரண்டையும் தெளிவாக காட்டாமல் படம் எடுக்க முடியாது. இப்படத்தில் வன்முறை இல்லை என நான் சொல்லவில்லை. வன்முறை இருக்கிறது அது தீயதை அழிப்பதற்கு மட்டுமே. அதனால் தான் தணிக்கைக் குழு சொன்னதை ஏற்றுக்கொண்டு மறுதணிக்கைக்கு சென்றோம். அவர்கள் படம் பார்ப்பதற்கு 50 நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. 50 நாட்கள் நான் எப்படி இருந்தேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

மறுதணிக்கையில் கங்கை அமரன் சார் படம் பார்த்தார். சினிமாவில் நீண்ட நாட்கள் இருந்ததால், அவருக்கு இப்படம் பற்றி புரிந்துவிட்டது. ‘U/A’ சான்றிதழ் எதிர்பார்த்தேன். ஏனென்றால் 15 – 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் மனதில் வைத்து தான் படம் எடுத்தேன். “படத்தைக் காப்பாற்றி கொள்ளுங்கள்” என ‘A’ சான்றிதழ் கொடுத்தார். ‘U/A’ வேண்டும் என்றவுடன், “பாதி படம் தான் கிடைக்கும்” என்றார். சரி என்று வந்துவிட்டேன். இங்கிருக்கும் தணிக்கைக் குழுவை பார்க்கும்போது மும்பை தணிக்கைக் குழு ஓ.கே தான் என்று தோன்றுகிறது.

4 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று இருந்தேன். அங்கு ஒருவர் “என்ன, படத்துக்கு ‘A’ சான்றிதழாமே! படத்தில் எத்தனை ‘பிட்டு’ காட்சிகள் இருக்கின்றன?” என்று கேட்டார். இப்படிப்பட்ட கண்ணோட்டங்கள் தான் பிரச்சினை. மக்களைப் பொறுத்தவரை கதை ரொம்ப வலுவானது, வன்முறை இருக்கிறது என்றால்கூட ‘A’ சான்றிதழ் எனும்போது அவர்களைப் பொறுத்தவரை பிட்டு படம் தான். போஸ்டரில் ‘A’ சான்றிதழ் என்றாலே பிட்டு இருக்கிறது என்கிறார்கள். அது தான் கஷ்டமாக இருக்கிறது. ‘A’ என்றால் எதற்கு எல்லாம் கொடுப்பார்கள் என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும்.

இவ்வாறு இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் கூறினார்.