மனிதன் – விமர்சனம்

உங்கள் பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் மனிதநேயமும் கலந்திருக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை நெத்தியடியாகச் சொல்ல வந்திருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’.

பொள்ளாச்சியில் வக்கீலாக இருக்கிறார் நாயகன் உதயநிதி ஸ்டாலின். இவர் எப்படித்தான் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றாரோ என எண்ணும் அளவுக்கு மிகவும் அப்பாவியாக இருக்கிறார்.

இவரும் இவருடைய முறைப்பெண்ணான ஹன்சிகாவும் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஒரு வழக்கிலாவது வெற்றி பெற்று, வெற்றிகரமான வக்கீல் என பெயர் எடுத்தால் தான் அவரை திருமணம் செய்துகொள்ள தனது பெற்றோர்கள் சம்மதிப்பார்கள் என தவிக்கிறார் ஹன்சிகா.

ஆனால், வெற்றிகரமான வக்கீலாக பிரகாசிக்க முடியாத உதயநிதி, சக வக்கீல்கள் மற்றும் ஹன்சிகாவின் பெற்றோர்களது நண்பர்கள் ஆகியோரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிறார்.

இதனால் மனம் நொந்த உதயநிதி, பொள்ளாச்சியில் தொழில் செய்யப் பிடிக்காமல் சென்னைக்கு கிளம்பி வருகிறார். சென்னையில் இவரது உறவினரான விவேக் வக்கீலாக இருக்கிறார். அவரும் போதுமான வருமானம் இல்லாமல், பக்கத் தொழிலாக ஊறுகாய் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு அகப்படுமா என்று விவேக்குடன் சேர்ந்து தேடி அலைகிறார் உதயநிதி. ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்நிலையில், பெரிய தொழிலதிபர் ஒருவரின் பணக்கார மகன், நள்ளிரவில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று, சாலையோரம் குடும்பம் குடும்பமாய் தூங்கிக்கொண்டிருக்கும் கூலித் தொழிலாளர்கள் மீது ஏற்றி பயங்கர விபத்தை ஏற்படுத்திவிடுகிறான். இதில் 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வருகிறது.

அந்த பணக்கார குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகிறார், பிரபலமான மிகப் பெரிய வக்கீலான பிரகாஷ்ராஜ். அவர் எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும் தன் வாதத் திறமையாலும், சூழ்ச்சிகரமான நரித் தந்திரத்தாலும் வெற்றி வாகை சூடுபவர் என பெயரெடுத்தவர். பணக்கார குற்றவாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர். இதனால் கோடிகளில் வக்கீல் ஃபீஸ் வாங்குபவர்.

6 அப்பாவிகளின் உயிர் பறித்த பணக்கார இளைஞனுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் வாதாடி, அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கிறார்.

அப்பாவி மக்களுக்கு எதிரான இந்த தீர்ப்பு உதயநிதியின் மனதை வெகுவாக பாதிக்கிறது. இதனால், இந்த தீர்ப்புக்கு எதிராக பொது நல வழக்கு தொடுக்கிறார் உதயநிதி. விளைவாக பல பிரச்சனைகளும், இடையூறுகளும் இவருக்கு ஏற்படுகின்றன.

சாதாரணமான வக்கீலான உதயநிதிக்கும், சூரத்தனமான வக்கீலான பிரகாஷ்ராஜூக்கும் இடையில் நடக்கும் இந்த நீதிமன்ற யுத்தத்தில் வெற்றி பெறுவது யார்? எப்படி வெற்றி பெறுகிறார்? என்பது மீதிக்கதை.

இதற்குமுன் காமெடி கலந்த காதல் கதைகளின் நாயகனாக வலம் வந்துகொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, முதல் முறையாக இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். “நடிகர் உதயநிதி நல்ல ஃபார்முக்கு வந்துவிட்டார்” என பாராட்டும் அளவுக்கு நடிப்பில் பிய்த்து உதறியிருக்கிறார். முதல் பாதியில் அப்பாவி வக்கீலாக வந்தாலும், பிற்பாதியில் சாலையோரங்களில் தங்கி வாழும் குடும்பங்களின் துன்பங்களை உணர்ந்து, அவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் மனிதநேயம் மிக்க வக்கீலாக மாறி, ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கிறார் உதயநிதி.

எத்தகைய குற்றவாளியையும் தன் சாதுர்யத்தால் விடுவித்துவிடும் “பெரிய வக்கீல்”கள், பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, எப்படி மனித நேயமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் புகுந்து விளையாடியிருக்கிறார். பிரபலமான வக்கீலாக அவர் காட்டும் கம்பீரமும், அலட்சியமும், வசன உச்சரிப்பும் அவர் ஒரு மகா கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன.

இந்த படத்தில் மிக முக்கியமான சர்ப்ரைஸ் என்னவென்றால், உயர்நீதிமன்ற நீதிபதியாக வரும் ராதாரவியின் நடிப்பு. இருக்கையில் அமர்ந்தபடியே அலட்டிக்கொள்ளாமல் அவர் வெளிப்படுத்தும் அற்புத நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.

பள்ளி ஆசிரியையாக வரும் நாயகி ஹன்சிகா, கதையையும், நாயகன் உதயநிதியையும் பொறுப்பாக வழிநடத்திச் செல்லும் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

துணிச்சல் மிக்க தொலைக்காட்சி நிருபராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

உதயநிதியின் உறவினராக வரும் விவேக் காமெடியனாக மட்டுமல்லாமல் ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாகவும் நடித்து கைதட்டல் பெறுகிறார்.

இயக்குனர் ஐ.அஹமத், ‘ஜாலி எல்எல்பி’ என்ற இந்தி படத்தை தமிழ் ரசிகர்கள் ரசிக்கும்படியாக பிரமாதமாக தமிழ் மறுஆக்கம் செய்திருக்கிறார். நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கதை என்பதால், கதைக்கு தேவையான அளவான, சரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து சிறப்பாக இயக்கியிருக்கிறார். நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் தனி முத்திரை பதித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்திற்கு மற்றொரு பலம் வசனங்கள். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது, அவர் பேசும் வசனங்கள் கல் நெஞ்சையும் கரைத்துவிடும்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

மதியின் ஒளிப்பதிவு துல்லியம்.

கருத்தாழமும், விறுவிறுப்பும் மிகுந்த இந்த சிறந்த படத்தில் நடித்ததற்காகவும், தயாரித்ததற்காகவும் உதயநிதி என்றென்றும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

‘மனிதன்’ – ரசிப்புக்கு உரியவன்!