“எம்.எஸ்.தோனி வாழ்க்கை படத்தில் என்னை பற்றி எதுவும் இருக்காது”: லட்சுமிராய் நம்பிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹிந்தி படம் ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி’. இப்படத்தில் தோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். பிரபல ஹிந்தி இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார்.

தோனி உலகப் புகழ் பெற்றவர் என்பதால், இப்படம் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, சுமார் 60 நாடுகளில் 4ஆயிரத்து 500 திரையரங்குகளில் இந்த (செப்டம்பர்) மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது. ஓர் இந்தியப்படம் இத்தனை நாடுகளில், இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

0a1

‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ கிரிக்கெட் அணி தொடங்கப்பட்டபோது, தோனியும், தமிழ் திரைப்பட நடிகை லட்சுமிராயும் காதலித்ததாக செய்திகள் வெளியாயின. இது பற்றி தோனி வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால், லட்சுமிராய் 2014ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், தானும், தோனியும் காதலித்து வந்ததாகவும், அந்த காதல் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படத்தில் லட்சுமிராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று பரவி வருகிறது.

இது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள லட்சுமிராய்,  “எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை பற்றிய படத்தில் நான் இருப்பேனா என ஏன் என்னிடம் கேட்கிறார்கள்? தோனியுடன் நான் இப்போது தொடர்பில் இல்லை. அவரும் அவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போய்விட்டார். திருமணமாகி ஒரு குழந்தையும் அவருக்கு இருக்கிறது.

“அவருடைய வாழ்க்கை பற்றிய படம் வருகிறபோது, ஏன் எல்லோரும் என்னைக் கேள்வி கேட்கிறார்கள்? தோனியின் படத்தில் என்னைப் பற்றி எதுவும் இருக்காது என எண்ணுகிறேன். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை பற்றிய படம் என்பதால், அது பற்றி தான் அந்தப் படத்தில் இருக்கும். அவருடைய உறவுகளைப் பற்றி இருக்காது. மேலும், இன்னொருவருடன் இணைத்துப் பேசப்படுவதை யாருமே விரும்ப மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.