“பிரிமியர் பட்ஸல் லீக் இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்!” – ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவில் தொடங்கவுள்ள பிரீமியர் பட்ஸல் லீக் கால்பந்து தொடரானது இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரீமியர் பட்ஸல் லீக் சார்பில் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் கிரிக்கெட் தவிர வேறு விதமான விளையாட்டுகளில் கவனம் செலுத்த மாட்டோம். இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற பிரீமியர் பட்ஸல் லீக் கால்பந்து அமைப்பானது, இந்தியாவில் தொடரொன்றை நடத்த திட்டமிட்டிருப்பது இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

பட்ஸல் எனப்படும் உள் அரங்கு கால்பந்து விளையாட்டு பற்றி இப்போதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன். இந்த விளையாட்டுத் தொடருக்கான பிரத்யேகமான பாடலுக்கு நான் இசையமைக்கவுள்ளேன். அண்மைக் காலங்களாக விளையாட்டுத் துறை தொடர்பான அதிகளவு படங்களுக்கு இசையமைத்து வருவதால். விளையாட்டுத்துறை சார்ந்த எனது புரிதல் அதிகரித்துள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட் ஹோலியும் கலந்து கொண்டார்.  பட்ஸல் விளையாட்டுத் தொடர்பான ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் வீராட் ஹோலி பாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.