பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு வயது 69.

‘தாலாட்டு’ என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி, ‘சட்டம் என் கையில்’ உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் கவிஞர் காளிதாசன்.

இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் காளிதாசன் என்ற பெயரிலேயெ பாடல் எழுதினார். அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானதால் சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதினார். அவற்றில் ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் இடம் பெற்ற “தலைமகனே கலங்காதே… தனிமை கண்டு மயங்காதே…” என்ற பாடலும் அடங்கும்.

காளிதாசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், அவர் சமீபத்தில் தஞ்சையில் உள்ள வீட்டிற்குத் திரும்பினார்.

நேற்று இரவு உடல்நிலை மோசமாகி காலமானார். அவரது உடல் தஞ்சையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக எண்-50, நல்லப்ப வாத்தியார் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை என்ற விலாசத்தில் உள்ள அவரது மகன் பாலசுப்ரமணியன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணியளவில் மூலகொத்தலம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.

மறைந்த கவிஞர் காளிதாசனுக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.