“அதிமுகவுக்கு சாதகமாக நடக்கிறது மாநில தேர்தல் ஆணையம்!” – மு.க.ஸ்டாலின்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி:-
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆனால், திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.
உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. எது எப்படியிருந்தாலும் இதையெல்லாம் எதிர்கொள்ள திமுக தயாராகவே உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
ஏற்கெனவே எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசி கூட்டணி கட்சிகள் போட்டியிட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அனுப்புமாறு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதன்படி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரான பிறகு விரைவில் வெளியிடப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதற்காக திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இப்போது உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளோம். தேர்தலை நிறுத்த வேண்டும் என திமுக முயற்சிக்கவில்லை. தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.