“புயலால் சேதம் இல்லை என கூறும் அரசியல்வாதிகள் தேசத்தின் பேரிடர்!” – கமல்ஹாசன்

கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தென்னை, பலா, முந்திரி, சவுக்கு, நெற்பயிர் விவசாயம் அடியோடு அழிந்து போனது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. வீடுகள் சேதமடைந்தன.

‘கஜா’ புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் ஏற்கெனவே இரண்டு முறை பார்வையிட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கஜா புயல் கடந்த பூமியைப் பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம்  ஒன்றும் இல்லை என ஊடகங்களில்  கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேண்டும்” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.