‘2.ஓ’: பட்சிராஜன் தான் ஹீரோ ஆகியிருக்க வேண்டும்!

2.0-வில் பிடித்த கதாபாத்திரம் சந்தேகமில்லாமல் பட்சிராஜன். அந்தக் கதாபாத்திரத்துக்கு எழுதப்பட்டிருக்கும் ஃப்ளாஷ்பேக். அந்த ஃப்ளாஷ்பேக் மூலமாக, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு அழுத்தமான பின்னணி நிறுவப்பட்டிருக்கும். அவரது பார்வை சரியா, தவறா என்பதைப் பின்னால் கவனிப்போம். ஆனால், தனக்கென்று ஒரு கருத்தைக் கொண்டு, அந்தக் கருத்தின்படி வாழும் கதாபாத்திரம் என்ற வகையில் படத்தின் மிக அழுத்தமான கேரக்டர் பட்சிராஜன் தான்.

ஷங்கர் படங்களில் ‘இந்தியன்’ தாத்தா போன்ற ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இது. உண்மையில் ஒரு ஆன்ட்டி ஹீரோ மெட்டீரியல். ‘அந்நியன்’, ‘ஜென்டில்மேன்’ போன்ற ஒரு படத்துக்கான ஹீரோ இவர்.

இந்தக் கதாபாத்திரத்தின் கதையில், ஷங்கரின் வழக்கமான டச் உள்ளது. ‘இந்தியன்’ தாத்தா ஏன் கொலைகள் செய்ய ஆரம்பித்தார்? அம்பி எப்படி அந்நியன் ஆனான்? அதேபோல்தான் பட்சிராஜன். இந்தக் கதாபாத்திரத்தை எழுதிய வகையில் ஷங்கர் தனது டிரேட் மார்க் டெம்ப்ளேட்டை இங்கே கொண்டு வந்திருக்கிறார்.

ஆனால், எனக்கு மனதில் பட்ட ஒரே விஷயம், முதன்முறையாக ஒரு ஷங்கர் படத்தில் ஹீரோவுக்கு இப்படிப்பட்ட ஃப்ளாஷ்பேக் இல்லாமல், வேறு ஒரு கதாபாத்திரத்துக்கு எழுதப்பட்டிருக்கிறது. இது நிறையா? குறையா?

பட்சிராஜன் அடிப்படையில் ஒரு நல்லவர். பறவைகளுக்காகவே வாழ்பவர். அப்படிப்பட்ட நபர் வழக்கமாக ஷங்கர் படங்களில் ஹீரோவாகத் தான் வருவார். ஆனால், இதில் ஏற்கெனவே ரஜினி இருக்கிறார். எனவே, பட்சிராஜன் வில்லனாக மாறுகிறார்.

ஆனால், வில்லனாக மாறுவதற்கான லாஜிக் பட்சிராஜன் கதாபாத்திரத்திடம் இருக்கிறதா? ரஜினி படம் – எனவே, குறையே சொல்லக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இருந்து வெளியே வருவோம். அப்படி வந்தால்தான் இதைப் பார்க்க முடியும்.

பறவைகளைக் கூடக் கொன்று உண்ணக்கூடாது என்று ஒரு பாயிண்ட் ஆஃப் வியூ வைத்திருக்கும் நல்லவர் (பறவைகளை உண்டால் கெட்டவனா என்பது பற்றியெல்லாம் நாம் பார்க்க வேண்டாம்) ஒருவர், இன்னமும் நிரூபிக்கப்படாத ஒரு கருத்துக்காகவே வாழ்ந்து, போராடி, உயிர் துறந்து, திரும்ப வந்து வில்லனாக மாறுகிறார் என்பது வலுவாக இருக்கிறதா?

ஒரு ஒப்பீடு செய்வோம். ‘இந்தியன்’ தாத்தா ஏன் அதிகாரிகளைக் கொன்றார்? அவர் நல்லவர்தான். ஆனால், அவருக்கு ஒரு இழப்பு நிகழ்ந்தது. அது, அரசின் மீதும், அதிகாரிகளின் மெத்தனத்தின் மீதும் அவருக்கு வெறுப்பை உருவாக்கியது. அதேபோல், அம்பி அந்நிய அவதாரம் எடுப்பதும் இதுபோன்ற ஒரு இழப்பால்தான். கிச்சா கோடிக்கணக்கில் பணம் திருடியதும் இதேபோன்ற ஒரு இழப்பால்தான்.

அப்போது, இவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருக்கும்போது, இவர்களைப் போலவே ஒரு ஆன்ட்டி ஹீரோவாக உருவெடுக்கும் பட்சிராஜன் மட்டும் ஏன் கெட்டவர்? உண்மையில் நாம் பார்த்த அனைவரும் சாதாரண மனிதர்கள். பட்சிராஜன் தான் ஒரு உயரிய விஷயத்துக்காக வாழ்க்கை முழுதும் செலவு செய்தவர். சலீம் அலி போன்றவர். ஒரு அப்துல் கலாம் போன்ற பிம்பம் உடையவர். அவர் ஒரு படத்துக்கு வில்லன் அவதாரம் எடுக்கும்போது அதை நம்புவது கொஞ்சம் பிரச்சினையாக இருக்கிறது. அதிலும், வில்லனாக மாற அவர் எடுத்துக்கொள்ளும் காரணம், செல்போன்களால் பறவைகளுக்கு ஆபத்து என்பது எத்தனைதான் படத்தில் ஆதாரங்களுடன் வந்தாலும், நிஜத்தில் அப்படி இல்லை என்பதால் அதை நம்ப முடிவதில்லை.

நிஜத்தில் இல்லாத ஒரு விஷயம், படத்தில் முக்கியமான திருப்பமாக வந்தால் அதை நம்புவது கடினம். டைனோசர்கள் நிஜத்தில் இருந்ததா? மார்வெல் கதாபாத்திரங்கள் நிஜமா? என்று நண்பர்கள் கேள்வி எழுப்பக்கூடும். ஆனால், நான் சொல்ல வருவது, ஒரு ஆதாரபூர்வமான செய்தி. செல்போன்களால் பறவைகளுக்கு ஆபத்து என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அது உண்மையா? பொய்யா? என்றே யாருக்கும் தெரியாது. பறவையியல் நிபுணர்களே இன்னும் நிஜத்தில் அப்படி ஆதாரங்களை வெளியிடவில்லை. எனவே, அந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு ஒரு பறவையியல் நிபுணர் வில்லனாக மாறுவது மிகவும் வீக்காக இருந்தது. என்னால் அதை சரியான லாஜிக்காக நம்ப முடியவில்லை.

உண்மையில் பட்சிராஜன் ஹீரோவாகத்தான் ஆகியிருக்கவேண்டும். ஏனெனில், ஷங்கர் படங்களில் ஹீரோக்களுக்குத்தான் ஒரு இழப்பு – அதன் மூலம் அவர்கள் பழிவாங்குவது என்று இதுவரை நிறுவப்பட்டிருக்கிறது. பட்சிராஜனின் ஃப்ளாஷ்பேக் அவரை ஒரு நல்லவர் என்று அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறது வேறு. அப்படியென்றால், அவரை வில்லனாக எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்னால் முடியவில்லை.

அதேபோல், அவர் வில்லனாக உருவெடுக்கும் சம்பவமும் முற்றிலும் நம்ப முடியவில்லை. அந்த இடத்தில் லாஜிக் மிகவும் வீக்காக இருந்தது. ஒரு பேய்ப்படம் பார்க்கிறோமோ என்ற எண்ணம் எழுந்தது.

கருந்தேள் ராஜேஷ்

திரைக்கதை எழுத்தாளர்

 

Read previous post:
0a1b
ஐராவதம் மகாதேவன் பற்றி வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்!

ஐராவதம் மகாதேவனை 1968-ல் முதல் முறையாகச் சந்தித்தேன்… சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அஸ்கோ பர்போலா தான் எழுதிய சிறு

Close