லியோ – விமர்சனம்

நடிப்பு: விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி, பேபி இயல், மன்சூர் அலி கான், ஜார்ஜ் மரியான், மடோனா செபாஸ்டியன், ஜாபர் சாதிக் மற்றும் பலர்

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா

படத்தொகுப்பு: பிலோமின் ராஜ்

இசை: அனிருத்

தயாரிப்பு: ’செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ லலித் குமார்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகமது (வி4யு மீடியா)

”மாபெரும் கமர்ஷியல் ஹிட் திரைப்படமாக ‘மாஸ்டர்’ படத்தைக் கொடுத்த நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜோடி, மீண்டும் இணைகிறது” என்ற அறிவிப்பு முதன்முதலாக வெளிவந்ததிலிருந்து நாளொரு புதுத் தகவலும், பொழுதொரு பரபரப்பான சர்ச்சையுமாக வளர்ந்து, மிகுந்து, வரலாறு காணாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதன் விளைவு, இன்று ‘லியோ’ வெளியாகியுள்ள திரையரங்குகள் வெள்ளமெனத் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தால் திருவிழாக் கோலம் பூண்டிருக்கின்றன. இயற்கையாகவும், செயற்கையாகவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அபரிமிதமான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…

இது எந்த வெளிநாட்டுப் படத்தின் உல்டா? என்று விமர்சகர்கள் தங்கள் மூளையைக் கசக்கி, தேடுதல் வேட்டை நடத்த வேண்டாமே என்ற நல்லெண்ணத்தாலோ, என்னவோ, டேவின் குரோனன்பெர்க் இயக்கத்தில், விக்கோ மோர்டென்சன் நடிப்பில், ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில்,  2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘ எ கிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்ற ஆங்கிலப்படத்தின் இன்ஸ்பரேஷனில் ‘லியோ’ உருவாகியுள்ளது என்பதற்கான ‘நன்றி அறிவிப்பு’ கார்டை படத்தின் ஆரம்பத்திலேயே போட்டுவிடுகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இமாச்சலப் பிரதேசம். பனிமலை மேலுள்ள தியோக் எனும் சிறு நகரம். இங்கு காஃபி ஷாப் நடத்திவரும் நடுத்தர வயதுக்காரரான பார்த்திபன் (விஜய்), தன் மனைவி சத்யா (த்ரிஷா), பதின்ம வயது மகன் சித்தார்த் (மேத்யூ தாமஸ்) மற்றும் மகள் (பேபி இயல்) ஆகியோருடன் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் குடும்பத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அவர், அவ்வப்போது நகரத்துக்குள் நுழைந்துவிடும் காட்டு விலங்குகளைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் ‘அனிமல் ரெஸ்க்யூவர்’ ஆகவும் இருக்கிறார். அப்படி ஒருமுறை நகரத்துக்குள்  புகுந்து பார்வையில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறிய பயங்கரமான கழுதைப்புலியை (Hyena), அவர் வீராவேசத்துடன்  சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்ததால், அந்த நகர மக்களிடம் அவருக்கு நல்ல பெயர் உண்டு.

இந்நிலையில், மலைச் சாலையில் செயற்கையாக வாகன விபத்துகளை ஏற்படுத்தி, வழிப்பறி செய்யும் (சாண்டி – மிஷ்கின்) கொள்ளைக் கும்பல், ஒருநாள் இரவு பார்த்திபனின் காஃபி ஷாப்பிற்குள் நுழைந்து, அங்கிருந்த பணிப்பெண்ணை (பிக்பாஸ் ஜனனி) பலாத்காரம் செய்ய முயல்வதோடு, பார்த்திபனின் மகளது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தவும் எத்தனிக்கிறது. ஐந்து பேராக இருக்கும் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடும் பார்த்திபன், ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் அந்த ஐந்து கொள்ளையர்களையும் அவர்களது துப்பாக்கியாலேயே சுட்டுக்கொன்று விடுகிறார். அவரது இந்த பராக்கிரமச் செயலைப் பாராட்டும் நீதிமன்றம் அவரை விடுதலை செய்வதோடு, அவருக்கு வீரதீரச் செயலுக்கான விருது வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்கிறது.

இச்செய்தியை இந்தியாவிலுள்ள அனைத்து ஊடகங்களும் பார்த்திபனின் புகைப்படத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஊடகங்களில் வெளியான பார்த்திபனின் புகைப்படத்தை, தெலங்கானாவில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்), அவருக்கு வலது கரமாக இருக்கும் அவரது தம்பி ஹரால்டு தாஸ் (அர்ஜுன்) ஆகியோர் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். ‘இது பார்த்திபன் அல்ல; இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனதாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் லியோ’ என முடிவு செய்கிறார்கள். உடனே தங்களது படையுடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு விரையும் அவர்கள், பார்த்திபனைச் சந்தித்து, “எங்களுக்குத் தெரியும்… நீ லியோ” என்கிறார்கள். இதை திட்டவட்டமாக மறுக்கும் பார்த்திபன், “நீங்கள் தவறாக புரிந்துகொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். நான் பார்த்திபன்” என்கிறார். ”இல்லை. நீ லியோ தான். இதை ஒப்புக்கொள்ளும் வரை உன்னையும், உன் குடும்பத்தையும் விட மாட்டோம்” என்று சொல்லும் அவர்கள் பார்த்திபனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொல்லொணா தொல்லைகள் கொடுக்கிறார்கள்.

தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் பார்த்திபன், தாஸ் அண்ட் கோ கொடுத்த தொல்லைகளிலிருந்து தன் மனைவி, மக்களை எப்படி காப்பாற்றினார்? லியோ என்பது யார்? அவரை தாஸ் அண்ட் கோ ஏன் தேடுகிறது? அதற்கான பின்னணி என்ன? க்ளைமாக்ஸ் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு நினைத்துப் பார்க்க இயலாத பல்வேறு திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘லியோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1h

நடுத்தர வயது பார்த்திபன், இளம் வயது லியோ ஆகிய இருவேறு தோற்றங்களில், இருவேறு குணாதிசயங்களுடன் வருகிறார் விஜய். வழக்கமான விஜய்யாக இல்லாமல், ‘பார்த்திபன் விஜய்’ கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்ட விதத்தில், யதார்த்தத்துக்கு நெருக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுவதுமாக உள்வாங்கி, தானாக எதையும் செய்யாமல், இயக்குனர் சொன்னதை மட்டும் செய்து, விஜய் பிரமாதமாக நடித்திருக்கிறார். அன்பான காதல் கணவராக, பாசமும் பொறுப்பும் உள்ள அப்பாவாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேசமயம், தீயவர்களிடமிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற அக்கினிப் பிழம்பாய் மாறும்போது பார்வையாளர்களின் நரம்புகளில் முறுக்கேற்றுகிறார். விஜய் நடிப்புக்கு இது கேரியர் பெஸ்ட்.

’பார்த்திபன் விஜய்’க்கு முற்றிலும் வேறுபட்டதாக, ஆட்டமும் பாட்டமுமாக, துள்ளலும் விட்டேத்தியுமாக வலம் வரும் வகையில் ‘லியோ விஜய்’ கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கால்வாசிப் படம் நெடுக லியோவைப் பற்றிய பேச்சு இருந்தாலும், கொஞ்ச நேரம் மட்டுமே திரையில் தோன்றும் அக்கதாபாத்திரத்தில் அலப்பரையான நடிப்பைக் கொடுத்து, அதகளம் செய்திருக்கிறார் விஜய்.

பார்த்திபனின் காதல் மனைவி சத்யாவாக வருகிறார் த்ரிஷா. பொறுப்பான குடும்பத் தலைவியாக, பிள்ளைகளிடம் கறார் காட்டும் அழகான அம்மாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். இளமை ததும்பும் த்ரிஷாவுக்கு 17 வயதில் ஒரு மகனா? நம்ப முடியவில்லை… இல்லை… இல்லை…

பார்த்திபன் – சத்யா தம்பதியரின் மகன் சித்தார்த்தாக வரும் மேத்யூ தாமஸும், மகளாக வரும் இயலும் நல்ல தேர்வு. நன்றாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.

கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த சைக்கோவாக வரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி தன் பார்வையாலும் சிரிப்பாலும் மிரட்டியிருக்கிறார். அவருக்கு தலைவனாக வரும் இயக்குனர் மிஷ்கின் அவ்வப்போது அடிக்கும் கமெண்ட் ரசிக்கும்படியாக இருக்கிறது.

போதைப்பொருள் கடத்தல் மன்னனாக, ஜாதகம், நரபலி போன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கிப்போனவராக, வில்லன் ஆண்டனி தாஸாக வரும் சஞ்சய் தத், அவருக்கு தம்பியாக, கூட்டாளியாக, அவரை விட கொடூர வில்லன் ஹரால்டு தாஸாக வரும் அர்ஜுன், பார்த்திபனின் குடும்ப நண்பராக, வனத்துறை ரேஞ்சராக, கிளாஸாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி நியாயம் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டின், ராமகிருஷ்ணன், இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட ஏனையோரெல்லாம் துணை நடிகர்கள் போல வந்து போகிறார்கள். ‘எதற்கோ’ தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

விஜய்யை வித்தியாசமாக காட்டும் அதேவேளை, அது விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்கிற மாதிரியும் இருக்க வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த முயற்சியில் அபார வெற்றி பெற்றுள்ளார். பார்த்திபன் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்து, அதற்குத் தேவையான நடிப்பை வாங்கியதற்கு பாராட்டுகள். விஜய் – கழுதைப்புலி சண்டை, விஜய் – கொள்ளையர்கள் மோதல், விஜய் – த்ரிஷா குடும்பப் பாங்கான காதல், பிள்ளைகளுடன் நடத்தும் உரையாடல் என படத்தின் முதல் பாதியை சுவாரஸ்யமாக, நேரம் போனதே தெரியாத அளவுக்கு விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குனர்.

ஆனால், படத்தின் இரண்டாம் பாதிக்கு திரைக்கதை எழுதுவதில் இயக்குனர் பயங்கரமாக சொதப்பியிருக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல ஆக்‌ஷன் சீக்வன்ஸ்களை ஓவர் டோஸாகக் கொடுத்து பார்வையாளர்களை டயர்டு ஆக்கிவிடுகிறார்.

‘பாட்ஷா’ பாணி கதைகளுக்கு மிக முக்கியமான விஷயம் ‘நாயகன் ஏன் பாட்ஷா ஆனான்?’ என்பதற்கான பிளாஷ்பேக் தான். அதை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்லிவிட்டால் போதும், அதன் இயக்குனர் படைப்பாக்கத் திறன் உள்ளவராக போற்றப்படுவார். ‘லியோ’ படத்தைப் பொறுத்த வரை லியோ தொடர்பான பிளாஷ் பேக் தான் முக்கியம். படத்தின் டைட்டில் அது என்பது மட்டுமல்ல, லியோ யார் என்ற கேள்வி மீது தான் முக்கால்வாசித் திரைப்படம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு முக்கியமான பிளாஷ்பேக்கில், போதை மருந்து கடத்தல், கணக்கு வழக்கு இல்லாமல் கொலைகள் செய்தல், ஜாதகம், நரபலி போன்ற மூட நம்பிக்கைகள், ‘ஜீன்ஸ்’ படம் போல இரட்டைக் குழந்தைகள் என்றெல்லாம் எங்கெங்கோ சுற்றி போங்கு காட்டியிருக்கிறார் இயக்குனர். பிளாஷ் பேக்கை வேறு மாதிரி சுவாரஸ்யமாக, பார்வையாளர்களின் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொள்கிற மாதிரி கட்டமைத்திருந்தால், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கற்பனைவளம் இன்னும் வற்றவில்லை என போற்றிப் பாடியிருப்போம். என்ன செய்வது…?

இது தவிர, ‘லோகேஷ் கனகராஜ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் (எல்சியு)’ என்ற சிறையைத் தனக்குத் தானே கட்டி, அதனுள் அடைபட்டிருப்பதால், அவரது பழைய படங்களை நினைவூட்டும் காட்சிகள் இதில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு காஃபி ஷாப் ஓனருக்கு பாதுகாப்புக் கொடுக்க ஒற்றை போலீசாக தமிழ்நாட்டிலிருந்து ஜார்ஜ் மரியான் வருவது, காஃபி ஷாப்புக்கு மாயா வந்துபோவது, போதைப்பொருள் குடோனே கதி என வில்லன்கள் இருப்பது, படத்தின் இறுதியில் ’ஒரு குரல்’ ஒற்றை வரி வசனம் பேசுவது, அதன்பின் ஸ்க்ரால் டைட்டில்ஸ் மீது “விக்ரம்…” என்ற பாடல் ஒலிப்பது போன்ற ‘எல்சியு’ ஐட்டங்கள் எல்லாம் பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துகின்றன. உங்கள் ‘எல்சியு’  சிறையைவிட்டு வெளியே வாங்க லோகேஷ் கனகராஜ்…!

குளிர்ந்த பனிப்பிரதேசத்தை, அதன் பின்னணியில் விஜய்யை, த்ரிஷாவை அழகாகக் காட்டி அசத்தியிருக்கும் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு அபாரம்.

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், படத்தின் இரண்டாவது பாதியில் இன்னொரு 15 நிமிடக் காட்சிகளை வெட்டி எறியாதது திரைக்கலைக்கு அவர் செய்த துரோகம்.

ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் படுபயங்கரமாக நிகழ்த்திக் காட்டி, திரையில் ரத்தம் தெறிக்கவிட்டு,  படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைக்க உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

அனிருத் இசையில் `அன்பெனும் ஆயுதம்’ என்ற மெலோடி பாடலும், `நான் ரெடிதான் வரவா’ என்ற அதிரடி பாடலும் செம செம. பின்னணி இசையில் முழு பலம் கொடுத்து படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். சில சண்டைக்காட்சிகளுக்குப் பின்னணி இசையாக “கரு கரு கருப்பாயி…”, “தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்…” போன்ற பழைய பாடல்களைப் பயன்படுத்திய விதம் சிறப்பு!

‘லியோ’ – குடும்பத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் படம் என்பதால், விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக பார்த்து ரசிக்கலாம்!