சிக்கல் தீர்ந்தது: ரோகிணி உள்ளிட்ட சென்னை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது ‘லியோ’

விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சிக்கல் இருந்த நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகத் தீர்வு எட்டப்பட்டு, ரோகிணி உள்ளிட்ட சென்னை திரையரங்குகளில் நாளை (அக்.19) ‘லியோ’ திரைப்படம் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்திருந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதி முதல் ஆன்லைன் புக்கிங் தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

எனினும், சென்னையின் முக்கிய திரையரங்குகள் இன்னும் புக்கிங் திறக்காமல் இருந்தது. இதற்கு, படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள் படத்தின் ஒருவார வசூலில் வரும் லாபத்தில் 75 சதவீதம் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது தான் காரணம் என்று கூறப்பட்டது.

இதற்கு திரையரங்குகள் ஒப்புக்கொள்ள மறுத்ததால் பட வெளியீட்டில் சிக்கல் இருந்தது. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ‘லியோ திரையிடப்படாது’ என போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, தேவி, சங்கம், ஏஜிஎஸ், ஈகா உள்ளிட்ட திரையரங்குகளில் படத்தின் புக்கிங் தொடங்காமல் இருந்தது.

இந்நிலையில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு எட்டப்பட்டதையடுத்து ரோகிணி திரையரங்கில் நாளை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புக்குப் பின் புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. மற்ற பிரதான திரையரங்குகளிலும் படம் நாளை வெளியாகிறது.