கூச முனிசாமி வீரப்பன் – விமர்சனம்

திரையில் தோன்றுவோர்: வீரப்பன், பத்திரிகையாளர்கள் நக்கீரன் கோபால், ‘ஹிண்டு’ என்.ராம், சுப்பு, ஜீவா தங்கவேலு, ஜெயபிரகாஷ், வழக்கறிஞர்கள் பாப்பா மோகன், தமயந்தி, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.அலெக்சாண்டர்,  நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் பலர்

எழுத்து: ஜெயசந்திர ஹஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன்

இயக்கம்: ஷரத் ஜோதி

ஒளிப்பதிவு: ராஜ்குமார்.பி.என்

படத்தொகுப்பு: ராம் பாண்டியன்

இசை: சதீஷ் ரகுநாதன்

தயாரிப்பு: ‘தீரன் புரொடக்‌ஷன்ஸ்’ பிரபாவதி

ஓடிடி தளம்: ஜீ 5

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (டீம் எய்ம்)

ஒரு கதையை யார் பக்கம் இருந்து சொல்கிறோம் என்பது முக்கியம். உதாரணமாக, ஒரு கதையை மனிதர்கள் பக்கம் இருந்து சொல்வதாக இருந்தால், “மானும் மாடும் சாதுக்கள்; இந்த சிங்கமும் புலியும் தான் கொடூர மிருகங்கள்” என்போம். அதே கதையை புற்கள் பக்கம் இருந்து சொல்ல நேர்ந்தால், “சிங்கமும் புலியும் சாதுக்கள்; இந்த மானும் மாடும் தான் கொடூர மிருகங்கள்” என்போம்.

அப்படித்தான் ‘சந்தனக்கடத்தல் வீரப்பன்’ கதையும்!

தமிழ்நாடு – கர்நாடக காவல்துறைகளுக்கும், வனத்துறைகளுக்கும் பயங்கர கிரிமினலாகவும், அவ்விரு மாநில அரசுகளுக்குப் பெரிய தலைவலியாகவும், யாரும் எளிதில் நெருங்க முடியாத ’காட்டு ராஜா’வாகவும், எளிய மக்களின் ‘ராபின்ஹுட்’ ஆகவும் நம் சமகாலத்தில் வாழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் கதை எவருக்கும் சுவாரஸ்யமானது; ஆவலைத் தூண்டக் கூடியது.

வெகுமக்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி உடனடியாகக் கல்லா கட்ட வேண்டும் என்ற பேராசையில், ”வீரப்பனின் வாழ்க்கைக் கதை” என்ற பெயரில் ஆளாளுக்கு தமிழ், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களாக, தொலைக்காட்சித் தொடர்களாக, இணையத் தொடர்களாக எடுத்துத் தள்ளினர். ஆனால், அவையெல்லாம் போலீஸ் மற்றும் அதிகார வர்க்கத்தின் பக்கம் இருந்து சொல்லப்பட்ட கொஞ்சம் உண்மையும் நிறைய கட்டுக்கதையுமாக இருந்ததால் நடுநிலையாளர்களுக்கும், வெகுமக்களுக்கும் மனநிறைவை அளிக்கவில்லை.

இக்குறையை நூறு சதவிகிதம் நிவர்த்தி செய்வதற்காக, முழுக்க முழுக்க வீரப்பன் பக்கமும், தேடுதல் வேட்டையில் சீரழிக்கப்பட்ட அப்பாவி கிராம மக்கள் பக்கமும் இருந்து வீரப்பனின் உண்மைக் கதையை தத்ரூபமாக உயிரோட்டத்துடன் சித்தரிக்கும் “கூச முனிசாமி வீரப்பன்” என்ற அபூர்வமான, வித்தியாசமான ஆவணப்பட தொடர், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த தொடர் ஆறு எபிசோடுகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் முக்கால் மணி நேரம் என்ற கணக்கில் மொத்த்த் தொடரும் நாலரை மணி நேரம் ஓடக்கூடியது. இந்த நாலரை மணி நேரமும் ஒரே சிட்டிங்கில் அமர்ந்து, ஒரே மூச்சில் ஆறு எபிசோடுகளையும் பார்த்தபோதுகூட கொஞ்சமும் போரடிக்காமல், ஆவணப்படம் என்ற உணர்வே ஏற்படாமல், திரில்லருக்குரிய விறுவிறுப்புடனும், ஃபிக்‌ஷனுக்குரிய சுவாரஸ்யத்துடனும் இருந்தது, இதன் குறிப்பிடத் தகுந்த சிறப்பு.

# # # # #

-RAJASANGEETHAN- பதிவு

எரிக் ஹாப்ஸ்பாம் social banditry என ஒரு வார்த்தையை பயன்படுத்துவார்.

Bandit என்றால் வழமையான மொழிபெயர்ப்பு, கொள்ளையன். அதாவது Bandana எனப்படும் Scarf வகை துணியை முகத்தில் கட்டி சென்று கொள்ளையடிப்பவரை bandit என்கிறார்கள்.

அமெரிக்க western படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். தொப்பி அணிந்து துணியை கட்டி முகத்தை மறைத்து குதிரையில் சென்று, ரயிலில் குதித்து கொள்ளையடிக்கும் ரக காட்சிகளை. அவர்களைதான் bandit-கள் எனப்படும் கொள்ளையர்களாக வரையறுக்கலாம்.

ஆனால் நாம் கண்ட, கேட்ட கதைகளில் வரும் ஜம்புலிங்கம், மம்பட்டியான் போன்ற பாத்திரங்களை வெறும் கொள்ளைக்காரர்கள் என வரையறுத்துவிட முடியாது. கொள்ளையை தாண்டிய ஒரு சமூகப்பங்கு அவர்களுக்கு இருக்கிறது. அவர்களை குறிக்கத்தான் Social Bandits என்கிற வார்த்தையாடலை தன் Bandits புத்தகத்தில் கையாளுகிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.

Social Bandit என்கிற வார்த்தையை சட்டத்துக்கு புறம்பானவர் அல்லது சட்டத்தை மீறுபவர் எனப் புரிந்து கொள்ளலாம். அல்லது பொதுவாக அரசாங்கங்கள் தரும் ‘சமூக விரோதி’ அடையாளம் இந்த ரகத்தை சேர்ந்ததுதான். எரிக் ஹாப்ஸ்பாம் பயன்படுத்தும் அர்த்தத்தில் விளக்குவதெனில், ஒரு சமூகத்தின் அதிகாரம் உருவாக்கும் சட்ட நியமங்களை ஏற்காமல் புறக்கணித்து தனக்கான விருப்பத்திலிருந்து விதிகளை உருவாக்கி வாழ்பவரை social bandit எனக் கொள்ளலாம்.

வீரப்பன் ஒரு social bandit!

0a1b

தற்போதைய Koose Munisamy Veerappan தொடருக்கு முன் நெட்ப்ளிக்ஸின் வெளியான வீரப்பன் தொடர் முழுக்க முழுக்க அரச ஆதரவில், அரசு கொடுக்கும் தரவுகளை கொண்டு, காவலர்களின் பக்கம் நின்று எடுக்கப்பட்ட தொடர். குறிப்பாக வீரப்பனால் தலை வெட்டப்படும் அதிகாரி, அகிம்சாமூர்த்தியாக சித்தரிக்கப்படும்போது எனக்கும் கவிதாவுக்கும் எழுந்த கேள்வி ‘நல்லவனுக்கு இருட்டுல என்னடா வேலை?’ என்பதுதான்.

அகிம்சாமூர்த்தியாக இருப்பவர் அதிரடிப்படையிலோ காவல்துறையிலோ இருப்பதை விட முரண்நகை இருக்க முடியுமா?

இருக்க முடியாது என்பதைதான் நக்கீரன் நிறுவனத்தார் எடுத்திருக்கும் வீரப்பன் தொடர் நமக்கு சொல்கிறது.

Koose Munisamy Veerappan தொடருக்கும் நெட்பிளிக்ஸ் தொடருக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம், அரசியல்!

State-ன் அரசியலை முன் வைத்து நெட்ப்ளிக்ஸ் தொடர் வந்ததென்றால், அதற்கு நேரெதிராக அரசியல் சாசனத்தையே எரித்து போராடும் தார்மீக எதிர்ப்புணர்ச்சியின் பக்கம் நின்று Koose Munisamy Veerappan வந்திருக்கிறது. அதிகாரத்தை எதிர்க்கும், கேள்வி கேட்கும் போக்கு தமிழ் அரசியலின் பிரத்தியேகதை என்றாலும் அது மிகையல்ல.

வேளாண் சமூகத்திலிருந்துதான் bandit வருவான் என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். நிலப்பிரபுக்கள், அரசாங்கம் என மக்களை ஒடுக்கும் ஏதோவொரு வகை அதிகார குவி மையத்துக்கு எதிராகவே அவனது செயல்பாடு இருக்கும். அதனாலேயே அவனுக்கு மக்களின் ஆதரவு இருக்கும் என்கிறார் எரிக்.

இத்தொடரிலும் வீரப்பன் திரும்ப திரும்ப சொல்வது “காசெல்லாம் மக்களுக்கு கொடுத்தான். எல்லா நல்லா சோறு சாப்பிட்டாங்க” என்பதுதான்.

அரசியல் சட்டம் உருவாகி இரண்டு வருடங்களில் வீரப்பன் பிறந்திருக்கிறான். இந்தியச் சமூகம் பெரிதும் அப்போது வேளாண் தொழிலையே சார்ந்திருந்தது. நேருவிய அரசியலின் விளைவாக நவீனமயமாக்கல் மெல்ல தொடங்கப்பட்டிருந்த காலம் அது.

வீரப்பன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன். 1871ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பதற்கான முனைப்பு தொடங்கியபோதே “எங்களை வன்னியர் குல ஷத்திரியர்கள் என குறிப்பிட வேண்டும்” என கணக்காளர்களுக்கு கடிதம் எழுதிய சாதி அது.

வேளாண் சமூகமாக இருந்த வன்னிய சமூகம், தனக்கான சமூகப் பொருளாதார அந்தஸ்தை பெறும் முயற்சியில் அப்போதிருந்தே இருந்து வந்த சமூகம். வன்னியர்கள், சமூக ரீதியிலான அந்தஸ்தை பெற, வருணாசிரமத்தின் ஷத்திரிய வருணத்துக்குள் தங்களை புகுத்திக் கொள்ள முயன்றனர். கணக்கெடுப்பு குழு அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. அதற்கு பிறகுதான் வன்னியர்கள் ஒருங்கிணைந்து அரசியல் சக்தியாக மாறும் முயற்சிகள் சங்கங்களின் வழியாக தொடங்கின. இத்தகைய பின்னணியில்தான் வீரப்பன் பிறந்திருக்கிறான்.

வன்னியர்கள் அரசியல் சக்தி ஆக வேண்டுமென்கிற போராட்டத்தின் மறுபக்கம்தான் வீரப்பன் என்றும் கொள்ளலாம்.

கூடுதலாக, அவர்கள் அரசியல் சக்தி ஆவதை தடுக்கும் அதிகார ஒழுங்கை புறக்கணிப்பவனாகவும் மீறுபவனாகவும் பதிலடி கொடுப்பவனாகவும் வீரப்பன் உருவானபோது, அதே அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிற மக்களுக்கும் நாயகனாக மாறுகிறான்.

இத்தகைய பார்வையை கொடுக்க இந்த அரசியல் சமூக அமைப்பு பற்றிய அரசியல் பொருளாதார அறிவு இருக்க வேண்டும். அதற்கு இந்த சமூகத்திலிருந்து எழுத்தாளர்களும் இயக்குநர்களும் எழ வேண்டும்.

Koose Munisamy Veerappan தொடரில் அது நேர்ந்திருக்கிறது. தமிழ் சமூக இதழியல் துறை வழியாக முக்கியமான சமூகப் பங்காற்றிய நக்கீரன் கோபாலும் Jeyachandra Hashmi போன்ற எழுத்தாளர்களும் இணைகையில், இச்சமூகத்தின் குரலை காட்சி ஊடகம் பிரதிபலிக்க முடிகிறது.

திரை ஆக்கத்தில் முத்திரையை பதித்திருக்கும் ஷரத் ஜோதி, அற்புதமான இசை வழங்கியிருக்கும் சதீஷ் ரகுநாதன், தொடரை எழுதியிருக்கும் Vasanth Balakrishnan மற்றும் சிறப்பாக தயாரித்திருக்கும் பிரபாவதிக்கும் வாழ்த்துகள். இத்தொடரில் என் நண்பர்கள் Keerthi Karthika, ராஜ்குமார் போன்றோர் பணியாற்றி இருப்பதும் மகிழ்ச்சி.

தொடரின் இரண்டாம் பகுதியும் வருகிறதாம். முதல் பகுதியே அட்டகாசம். பார்த்து விடுங்கள்.

# # # # #