கோப்ரா – விமர்சனம்

நடிப்பு: விக்ரம், இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ்மேனன், ரோபோ ஷங்கர் மற்றும் பலர்

இயக்கம்: அஜய் ஞானமுத்து

தயாரிப்பு: ’செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ லலித்குமார்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

0a1b

ஸ்காட்லாந்தில் ஒரு இளவரசர் கொல்லப்படுகிறார். இந்தியாவில் ஒரு மாநில முதலமைச்சர் கொல்லப்படுகிறார். ரஷ்யாவில் ஒரு ராணுவ ஜெனரல் கொல்லப்படுகிறார். இப்படி பல நாடுகளில் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள். இவர்களை எல்லாம் வெவ்வேறு கெட்டப்களில் வரும் ‘கோப்ரா’ என்ற விக்ரம் தான் கொலை செய்துவிட்டு தப்பிவிடுகிறார்.

இக்கொலைகளைப் புலனாய்வு செய்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க இண்டர்போல் அதிகாரி இர்ஃபான் பதான் களம் இறங்குகிறார். அவரது புலனாய்வில் ‘கோப்ரா’ என்ற மர்ம ஆசாமி தான் கொலையாளி என்பது புலனாகிறது. மேலும், கோப்ராவால் படுகொலை செய்யப்பட்ட எல்லோருக்கும் பன்னாட்டு நிறுவன இளம் தொழிலதிபரான ரோஷன் மேத்யூவுடன் தொடர்பு இருப்பதும் புலனாகிறது. கோப்ரா செய்யும் கொலைகள் அனைத்தும் கணிதத்தை அடிப்படையாக வைத்து மிகவும் கால்குலேட்டிவாக செய்யப்படுகின்றன என்பதால், கோப்ரா ஒரு கணித மேதை என்று கணிக்கிறார்கள். இதற்கிடையே, கோப்ராவைப் பிடிக்க ஹேக்கர் ஒருவர் இண்டர்போலுக்கு அவ்வப்போது துப்பு கொடுத்து உதவுகிறார்.

இறுதியில், சாதாரண கணக்கு ஆசிரியராக வாழ்ந்துகொண்டிருக்கும் விக்ரம் தான் இந்த கொலைகளைச் செய்த கோப்ரா என்பது இண்டர்போலுக்குத் தெரியவருகிறது.

ஒரு சாதாரண கணக்கு ஆசிரியர் ஏன் இது போன்ற முக்கிய தலைவர்களை கொலை செய்கிறார்? அவரது பின்னணி என்ன? அவரை பற்றி துப்பு கொடுக்கும் ஹேக்கர் யார்? இந்த ஹேக்கருக்கும், அந்த கணித ஆசிரியருக்கும் இடையே என்ன பிரச்சனை? என்பன போன்ற கேள்விகளுக்கு ஏராளமான திருப்பங்களுடன் விடை அளிக்கிறது படத்தின் மீதிக் கதை.

0a1cபடத்தின் பலமே விக்ரம் தான். மொத்த படத்தையும் அவர் ஒற்றைக் கலைஞனாய் தன்னந்தனியே தாங்கிப் பிடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை வியக்க வைக்கும் விக்ரம், இந்த படத்திலும் தனது கதாபாத்திரத்துக்கும், ஏழு வெவ்வேறு கெட்டப்களுக்கும் தேவையான உழைப்பையும், நடிப்பையும் முழுமையாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் தூள் பரத்தியிருக்கிறார். விக்ரம் படம் எப்போது வரும் என்று மூன்று வருடங்களாக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு செம தீனியாக இருக்கிறது, இப்படத்தில் விக்ரமின் நடிப்பு.

இண்டர்போல் அதிகாரியாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்திருக்கிறார். இண்டர்போல் அதிகாரி கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் அறிமுக நடிகராக இருந்தாலும். மிடுக்காகவும், சிறப்பாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விக்ரமின் காதலியாகவும் பேராசிரியையாகவும் வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, மற்றொரு காதலியாக வரும் மிருணாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பயிலும் சிறந்த கணித மாணவியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன், வில்லனாகவும் பன்னாட்டு நிறுவன இளம் தொழிலதிபராகவும் வரும் ரோஷன் மேத்யூ, அவரது உறவினராக வரும் சுரேஷ் மேனன், பத்திரிகையாளராகவும், கொலை அசைன்மெண்டுகள் பெறுபவராகவும் வரும் கே.எஸ்.ரவிக்குமார், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் உறவினராக வரும் ரோபோ ஷங்கர், விக்ரமின் மனதுக்குள் இருந்து குரல் கொடுப்பவராக வரும் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற வெற்றிப்படங்களான ‘டிமாண்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இந்த ’கோப்ரா’ என்ற ஆக்சன் த்ரில்லர் படத்தையும் இயக்கியிருக்கிறார். ஆக்சன் சீக்வென்ஸ்கள் அனைத்தையும் மயிர்கூச்செறியும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்க கடும் உழைப்பைப் போட்டுள்ள இயக்குனருக்கு பாராட்டுகள். கணித புத்திசாலித்தனத்தை க்ரைமுக்குள் புகுத்தி, வித்தியாசமான கதையை உருவாக்கி, திறம்பட இயக்கியிருக்கிறார். அதே நேரத்தில், அவர் படத்தை சாதாரண ரசிகர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் கொடுக்கத் தவறிவிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். திரைக்கதையில் உள்ள குழப்பங்கள் ரசிகர்களையும் குழப்பியடிக்கின்றன. லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கம். காதல் காட்சிகள் ஒட்டவில்லை. படத்தின் நீளத்தைக் குறைக்காதது பெருங்குறை.

ஏ.ஆர்,ரஹ்மானின் இசையில் ஏற்கெனவே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையும் ஓகே ரகம். படக்காட்சிகள் பிரேமுக்கு பிரேம் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக இருப்பதற்கு ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணனின் பங்களிப்பு அளப்பரியது.

‘கோப்ரா’ – விக்ரமின் அட்டகாசமான நடிப்புக்காகவும், கெட்டப்களுக்காகவும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம்; ரசிக்கலாம்!

Read previous post:
0a1a
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ‘சர்க்கார் வித் ஜீவா’ விளையாட்டு நிகழ்ச்சி: நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்

ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு

Close