“எப்பிழை செய்தேன் இவ்விகழ் வெனை சேர? நொந்தேனடா”: கமல் வேதனை!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் முழு ஆதரவு அளித்தார். அப்போராட்டத்துக்கு அவர் நேரில் சென்று ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக அப்போராட்டம் தொடர்பான நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ஊக்கம் அளித்து வந்தார்.

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது வீண்பழி சுமத்துவதற்காக போலீசாரே தீவைப்பு சம்பவங்களில் ஈடுபடும் ஒளிப்பதிவுகளை, கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து, போலீசாரின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தினார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்தவுடன், தனியாக செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து, தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் கமல்.

இந்த செய்தியாளர்களின் சந்திப்பைத் தொடர்ந்து “கமல். அரசியலுக்கு வர வேண்டும்” என்று பலரும் சமூக வலைதளத்தில் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் நொந்துபோனார் கமல்.

இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேள்.. தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே… உன்னுடன் நிற்கத் துணிந்த எனை அரசியல் தலைவருடனா சேரச் சொல்வாய்?. எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச் சேர? நொந்தேனடா” என்று தெரிவித்துள்ளார்.

“மாணவர்களாகிய உங்களுக்கு துணையாக இருந்ததற்கு என்னை அரசியலில் சேரச் சொல்கிறீர்களே… இந்த மாதிரி நீங்கள் நினைப்பதற்கு நான் என்ன தவறு செய்தேன்? வேதனைப்படுகிறேன்” என்பதை தான் கமல் தனக்கு வசப்பட்ட தமிழில் மேற்கண்ட செய்தியாக தெரிவித்துள்ளார்.