வேட்டியோ, சேலையோ அணிந்துவராத சினேகன் தமிழர்களுக்கு அறிவுரை!

“திரைப்பட விழாக்களில் பொன்னாடை போர்த்தாதீர்கள். விழாவில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு சேலையும், ஆண்களுக்கு வேட்டியும் அன்பளிப்பாக கொடுங்கள். வேட்டியும், சேலையும் நம் கலாசாரம். அதை வளர்ப்போம்” என்று படவிழா ஒன்றில் பாடலாசிரியர் சினேகன் பேசினார். அவர் இப்படி பேசும்போது, தலை நிறைய கூந்தல் வளர்த்திருந்தபோதிலும், நம் கலாசாரப்படி சேலையோ, வேட்டியோ அணியாமல், ஜீன்ஸ் பேண்ட் – ஷர்ட் அணிந்திருந்தார் என்பதுதான் நகைமுரண்.

ஏ.என்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில், எஸ்.டி.குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘களவு செய்ய போறோம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சந்தானபாரதி, நிதின் சத்யா, பவர் ஸ்டார் சீனிவாசன், மகாநதி சங்கர், பாடலாசிரியர் சினேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சினேகன் பேசுகையில், “வார்த்தைகள் புரியும்படியாக இந்த படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் எழுதியுள்ளனர். அந்த வார்த்தைகள் கேட்கும்படி இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.

“ஆனால், இன்றைய பாடலாசிரியர்களில் சிலர் எழுதும் பாடல்வரிகள் என்ன என்றே புரிவதில்லை.

“அப்படி புரியாத பாடல்களை என்ன வெங்காயத்துக்கு எழுத வேண்டும்?

“ஆங்கிலம் மற்றும் வேறுமொழி வார்த்தைகளைக் கலந்து புரியாத பாடல்களை எழுதுவதை விட்டுவிட்டு, நம் தமிழ் மொழியில் எழுதுங்கள். அதையும் புரியும்படி எழுதுங்கள்.

“திரைப்பட விழா மேடைகளில் தயவுசெய்து பொன்னாடை போர்த்தாதீர்கள். அதற்கு பதிலாக, விழாவில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு சேலையும், ஆண்களுக்கு வேட்டியும் அன்பளிப்பாக கொடுங்கள். வேட்டியும், சேலையும் நம் கலாசாரம். அதை வளர்ப்போம்.

இவ்வாறு ஜீன்ஸ் பேண்ட் – ஷர்ட் அணிந்து விழாவுக்கு வந்திருந்த சினேகன் பேசினார்.

“உபதேசம் – ஊருக்குத் தானடி, எனக்கு இல்லே” என்பார்களே… அது இது தானோ…!