‘கபாலி’ தோல்வி படமா?: ஜகா வாங்கினார் வைரமுத்து!

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, “கபாலி திரைப்படம் தோல்வி” என்றார். அந்த படத்தில் ரஜினிகாந்த் கோட் அணிவது பற்றியும் நக்கலடித்தார். “கபாலிக்கு முன்னாடி கோட் போட்டது நீங்கதான்னு நினைக்கிறேன். உங்களைப் பார்த்துதான் ரஜினிக்கு கோட் போட்டு ரஞ்சித் கபாலியை எடுத்துட்டாரு. நான் புரிந்து கொள்கிறேன், ஒவ்வொருவரையும், இந்தக் கூட்டத்தை, வந்திருக்கிற பெருமக்களை, அரசியலை, விஞ்ஞானத்தை, இல்லறத்தை, வாழ்வியலை, ஆணை, பெண்ணை, தொலைந்து போன விமானத்தை, கபாலியின் தோல்வியை….” என்று நீள்கிறது வைரமுத்துவின் நக்கல் பேச்சு.

வைரமுத்துவின் இந்த எகத்தாளப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பல்லாயிரக் கணக்கில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “வைரமுத்துவுக்கு ஏன் இத்தனை கோபம் என்பது புரிகிறது. அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார். ஆனால் வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். விஜய்யை வைத்து ‘சச்சின்’ படத்தை நான் எடுத்தபோது, ‘அஜீத் படத்தில், எவனா இருந்தா எனக்கென்ன… என்று பாட்டெழுதி, விஜய் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துவிட்டேன். எனவே சச்சினில் ஒரு வாய்ப்புக் கொடுங்கள். விஜய் ரசிகர்களை குளிர்விக்க விரும்புகிறேன்’ என்று கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்புக் கொடுக்க முடியாத நிலை. அடுத்து ‘துப்பாக்கி’ தயாரித்துக் கொண்டிருந்தபோதும் கேட்டார். முடியவில்லை. ‘கபாலி’யில் வாய்ப்புத் தர முடியாத சூழல். இதெல்லாம் புரியாமல் அவர் விஷம் கக்கி இருக்கிறார். ‘கபாலி’யை தோல்விப் படம் எனும் இவர்தான், அந்தப் படத்துக்கு முதல் நாளில் 4000 டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றார். ஒரு நயா பைசா நான் வாங்கவில்லை… யார் என்ன சொன்னாலும் ‘கபாலி’ வெற்றியைத் தடுக்க முடிந்ததா? இன்று அது மாபெரும் வெற்றிப் படம். மக்கள் தந்துள்ள வரவேற்பு மலைக்க வைக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி இது” என்றார்.

இந்நிலையில், தனக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை உணர்ந்து தற்போது ஜகா வாங்கியிருக்கும் வைரமுத்து, சப்பைக்கட்டு கட்டி சாமர்த்தியமாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வருமாறு:

கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ, எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன்.

கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை, புரிந்து கொள்வது ஒரு நிலை, ஏற்றுக் கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது, ஆண் – பெண் – உறவுகள் – இல்லறம் அன்பு – காதல் – கண்ணீர் – அரசியல் – கலை – அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன்.

நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன்.

கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.

என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை – நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.

இந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பே திரு. ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாகப் பேசினார்.

எங்கள் நட்பு பெரியது, தயவு செய்து யாரும் இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைரமுத்து தனது அறிக்கையில் கூறியுள்ளார்.