ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டுவாரா?: 24 மணி நேரம் கெடு!

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று (ஞாயிறு) மாலை சுமார் 4 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சர்க்கரை நோய் இருப்பதால் இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை அவருக்கு பெரிய அளவில் சிகிச்சை அளிக்க முடியவில்லை.

அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதய நாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக் கூடியது ஆஞ்ஜியோ ஆகும்.

அதன்பின்னர் அவருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் ஏற்படும் எதிர்வினையைப் பொறுத்து அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும்.

மாரடைப்பு ஏற்பட்ட நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை 24 மணி நேரம் அவரது உடல்நிலை மருத்துவ குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்படும். அதன்பின் தான் அவரது உடல் நிலையில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? அபாயக் கட்டத்தை தாண்டி விட்டாரா? என்பது உறுதியாக தெரிய வரும்.