ஜெயலலிதா மறைந்தார்: “அம்மா” என அ.தி.மு.க.வினர் கதறல்!

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சுமார் இரண்டரை மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, எப்போது வீடு திரும்புவார், எப்போது மீண்டும் பணிக்கு வருவார் என அ.தி.மு.க.வினரும், அ.தி.மு.க. ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், கட ந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4ஆம் தேதி) மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான செய்திகளால் பதற்றம் நிலவியதால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இதய நோய், நுரையீரல் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும், அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் வந்து மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

பகல் 12.30 மணிக்கு மீண்டும் ஒரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், ‘முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு எக்மோ (ECMO) என்ற கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தது.

ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும், அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவமனை வளாகமே பரபரப்பானது. பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி ஜெயலலிதாவின் உயிர் இரவு 11.30 மணிக்கு பிரிந்ததாக நள்ளிரவில் அப்போலோ சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டதும் மருத்துவமனை முன்பு திரண்டிருந்த அதிமுகவினர் ‘அம்மா’ என்று கதறித் துடித்தனர். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதனர்.

 

Read previous post:
0a1a
“அடித்தட்டு மக்களின் ஆவேசக்குரல் ‘மாவீரன் கிட்டு!” – தொல்.திருமாவளவன்

சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு சமீபத்தில் வெளியானது. விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார்

Close