”சமூக விரோத ‘ஜக்கி வாசுதேவ்’களை அழித்திட விழித்திடு தமிழா!”

கார்ப்பரேட்களிடம் கை கட்டுவதும், காசில்லாதவர்களிடம் கை நீட்டுவதும் அரசாங்கத்திற்கு வாடிக்கையே. இதனால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழக வளங்களை சுரண்டி அழித்து, பணத்தில் மூழ்கித் திளைப்பது வாடிக்கையாகி வருகிறது.

அப்படி வளர்ந்துவரும் கார்ப்பரேட்களை மிஞ்சும் வகையில் வளர்ந்து நிற்பது தான் ஜக்கி வாசுதேவின் “ஈஷா டிரஸ்ட்” என்ற பெயரில் இயங்கும் சமூக விரோத கூடாரம்.

இதை சாதாரணமாக சொல்லும்போது யாரும் நம்பப் போவதில்லை. காரணம், அவர்கள் பொதுமக்கள் முன் போடும் சமூக அக்கறை வேடம்.

உலகெங்கும் யோக கலையை சொல்லித் தரும் பள்ளிகள், மேலும், இங்கு ஈஷா பெயரில் ஐந்து பள்ளிகள், தமிழகம் முழுவதும் பசுமையைக் கொண்டு வர ஈஷா நர்சரிகள் என இருப்பதோடு, “இலட்சக்கணக்கில் மரக்கன்று நட்டோம், கோடிக்கணக்கில் நடுவோம், உலகையே பசுமையாக்குவோம்” என விளம்பரம் வேறு.

விளம்பரத்திற்க்கு மயங்கியவர்கள் தானே நம் மக்கள். ஆரம்பத்தில் இலவசமாய் கொடுப்பதாய் சொல்லி இன்று ஒரு செடி ஏழு ரூபாய்க்கு விற்று கல்லா கட்டும் கதை வேறு.

இவையெல்லாம் ஈஷாவின் தவறுகள் அல்ல; அதையும், அதன் யோகா குரு ஜக்கி வாசுதேவின் உண்மை உருவத்தையும் அறியாமல் பேச்சிலும், விளம்பரத்திலும் மயங்கிக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் தவறு.

ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து ஆழமாக சிந்தித்தால் உண்மை நிலை புரிந்துவிடும் எல்லோருக்கும். ஆனால் அதைச் செய்யத் தான் நம் மக்களுக்கு நேரமில்லை அதற்காகவே இந்த சிறு கட்டுரை.

நாம் இதில் மிக பெரிய ஆதாரங்களைத் தேடவோ, ஆராய்ச்சி செய்யவோ தேவையில்லை. சாதாரணமான கேள்விகளுக்கு விடை தேடினால் போதும். அப்படி நான் தேடியதே இதை எழுதுவதற்கான காரணம் …

யார் இந்த ஜக்கி…?

ஜெகதீஷ் வாசுதேவன் என்பதே முழுப் பெயர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலம் மைசூரில். இவர் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைத்தது 1989ஆம் வருடம்.

சத்குரு…

இவர் ‘சத்குரு’ என்று இவராலேயே சொல்லிக் கொள்ளப்பட்டார். வேறு யாரும் பெயர் வைக்கவில்லை.

கோவை வருகை…

இவர் கோவைக்கு வெறும் யோகா கற்றுக் கொடுக்க ஆசிரியராக இவரது குருவால் அனுப்பப்பட்டார். ஆனால் இங்குள்ள செல்வங்களையும், ஏமாளி செல்வந்தர்களையும் கண்டு இங்கேயே தங்கி விட்டார்.

இவரது குரு…

ஜக்கி ஒன்றும் பிறக்கும்போதே யோக குருவோ, கடவுளின் தூதரோ அல்ல. மைசூரில் “ரிஷி பிரபாகர்” என்னும் யோக குருவிடம் பயிற்று ஆசிரியராக பணியாற்றியவர். கோவை மற்றும் திருப்பூருக்கு யோகா கற்றுக்கொடுக்க அவரால் அனுப்பப்பட்டவர். ஆனால் இங்கு வந்ததும் இங்குள்ள வருமானத்தைக் கண்டு குருவின் தொடர்பையே துண்டித்துக் கொண்ட குருத்துரோகி. ஜக்கியுடன் சமகாலத்தில் பணியாற்றிய மைசூர் ராமகிருஷ்ணன் மற்றும் வித்யாசாகர் போன்றோர் இன்னும் யோகா வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

ஈஷா யோகா மையம்

‘ஈஷா யோகா மையம்’ 400 ஏக்கர் பரப்பளவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அரசின் விதிமுறைகளை மீறி 5 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதை இடிக்க அரசு ஆணை பிறப்பித்தும், பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி, மேலும் கட்டிடங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகிறது.

“காசுக்கு காலில் விழும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இவர் காலடியில் கிடக்கும் வரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

பசுமைத் திட்டம்

சத்குரு அவர்களின் ஆசைப்படியே உலகத்தை உடனடியாக பசுமையாக்கிவிட தொடங்கப்பட்டது தான் இந்த பசுமைப் பள்ளி இயக்கம்.

50 ரூபாய் செலுத்தினால், நமது பெயரில் ஒரு மரக்கன்று நடப்பட்டு, அதை அவர்களே பராமரித்து வளர்த்து உலகை பசுமையாக்கி விடுவார்கள்.

என்ன ஒரு அருமையான திட்டம் என இதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஈஷாவின் பசுமை அழிப்பை பற்றி பார்ப்போம்.

பசுமை அழிப்பு

ஆரம்ப காலகட்டத்தில், அதாவது 1990 களில் கோவை தொண்டாமுத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இக்கரை போளுவாம்பட்டி எனும் கிராமத்தில் நிம்மதியாய் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த சில விவசாயிகளிடம் பணத்தாசை காட்டி விவசாய நிலங்களை வாங்கிப் போட்டார். பின் அதில் தியானலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து, தன் லிங்க வியாபாரத்திற்கு கடை விரித்தார்.(26.11.1999.)

லிங்க வியாபாரத்தை தொடங்கிய ஜக்கி, பின் ஆன்மிக குருவாக உருவெடுக்க, பணமும் வந்து சேருகிறது. பணம் சேரச் சேர, அந்த லிங்க கோவிலைச் சுற்றி கட்டிடங்களை கட்டினார். அப்போது இருந்த வனத்துறை அதிகாரிகளோ சொற்ப பணத்திற்காக எந்த கேள்வியும் கேட்கவில்லை.

ஆன்மிகத்தை வளர்க்கும் பெயரில் அரசியல் தொடர்பை வளர்த்துக்கொண்ட ஜக்கி, 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், தன் வன அழிப்பை உக்கிரமாக்கிவிட்டார். தி.மு.க மற்றும் நக்கீரன் உதவியுடன் ஈஷாவிற்கு செல்லும் ஒற்றையடி காட்டுப்பாதையை தார்சாலையாகவும் மாற்றிவிட்டார். இதற்காக அழிக்கப்பட்ட மரங்களும் ஏராளம்.

அதே ஆட்சியில் வனத்திற்குள் செல்ல வசூலிக்கப்படும் கட்டணமும் ஈஷாவுக்காக ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசிற்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு வேறு.

2008 ல் கருணாநிதியின் தொடர்பு கிடைத்தபின் ஜக்கி தன் வன அழிப்பை விரிவுபடுத்தினார். அதன் விளைவு, எவ்விதமான சிரமமுமின்றி கட்டிடங்கள் விரிவு செய்யப்பட்டு, பல லட்சம் மரங்கள் அழிக்கப்பட்டதோடு வன விலங்குகளும் கொன்று குவிக்கப்பட்டன.

வனத்துறையின் ஆய்வறிக்கையின்படி, 1994 முதல் 2005 வரையிலான 9 ஆண்டுகாலத்தில் கட்டிடங்களின் மொத்தப் பரப்பளவு 37424.32 சதுர மீட்டர். 2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களின் மொத்த பரப்பளவு 55944.82.

ஆனால், ஜெயா ஆட்சிக்கு வந்ததும் 6.7.2011 அன்று வனத்துறையிடம் கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கிறார். அதற்கு வனச்சரக அலுவலர் 19.01.2012 அன்று அறிக்கையில், “ஈஷா அறக்கட்டளை, யானைகள் செல்லும் முக்கியமான வலசை பாதைகள் எனப்படும் யானைப் பாதை வழியே உள்ளது; ஏற்கனவே அமைந்துள்ள யோகா மையத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வனச் சாலையைப் பயன்படுத்தி வருவதாலும், கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு கட்டிடப் பணிகள் மேற்கொள்வதாலும் வனத்திற்கும், வன உயிரினங்களுக்கும் மற்றும் யானை வழித்தடத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பு” என கூறி அனுமதி வழங்க மறுக்கிறார்.அதோடு, 2012 பிப்ரவரியில், கட்டிடப் பணிகளை உடனே நிறுத்துமாறும் அறிவிப்பு கொடுக்கிறார். ஆனால் இவையெதையும் ஜக்கி கண்டுகொள்ளவில்லை.

மேலும், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாததால் டிசம்பர் 2012ல் மீண்டுமொரு நோட்டீஸ் அனுப்பியதால், கொடுத்த அனுமதிக் கடிதத்தையே திரும்பி வாங்கிக்கொண்டார் ஜக்கி. ஆனால் கட்டிடம் கட்டுவதை நிறுத்தவில்லை.

இது மட்டுமின்றி, சிறுவாணி ஆற்றிலிருந்து நாள்தோறும் 5000 லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுத்து நீராதாரத்தையும் சுரண்டுகின்றனர்.

200 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான மரங்கள் கொண்ட காட்டையும், நீராதாரத்தையும் அழித்துவிட்டு தான் “பசுமைக் கரங்கள்” என்று பசுமை நாடகம் போடுகிறார் இந்த ஜகதல கேப்மாரி.

யானைக் கொலை

இதுமட்டுமல்ல, 2006 முதல் 2011 வரை மட்டும் 50 யானைகள் இறந்திருக்கின்றன. ஈஷாவின் வன அழிப்பாலும், சுற்றுச்சூழல் மாசாலும், ஊருக்குள் நுழைந்த யானைகள் 2006 முதல் 2012 வரை 57 பேரை மிதித்துக் கொன்றிருக்கின்றன.

வெளிநாட்டினர்

மேலும், ஈஷாவில் சந்தேகமளிக்கக் கூடிய ஒரு விஷயம் – ஏகப்பட்ட வெளிநாட்டினர். சுதந்திரமாக ஈஷாவிற்குள்ளும் காடுகளுக்குள்ளும் சுற்றி வருகிறார்கள் எந்த தடையுமின்றி. ஆனால், நாம் அப்படிச் செல்ல முடியாமல் தடுக்கிறது காவியணிந்த காவலாளிக் கூட்டம்.

அதைப் போலவே, வெறும் யோகக் கலைக்காக வெளிநாட்டினர் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித் தருகிறார்கள் என்பதும் சந்தகத்திற்குரியதே. ஒரு வெளிநாட்டுப் பெண்மணி, நாலரை லட்சம் பணத்தைப் பறித்ததாக கூறி, காவல் நிலையத்தில் அளித்த புகாரும் காணாமல் போய்விட்டது.

புகார்களும், பண பலமும்

இவை மட்டுமல்ல, சொத்து அபகரிப்பு புகார், இவர் மனைவி விஜி மர்மமரணத்தின் மீது புகார், தொழிலதிபர் மனைவி பாரதி தொடர்பைப் பற்றிய புகார், பண்ணாரி சாலையில் ஒருவரை கார் ஏற்றிக் கொன்றது பற்றிய புகார் என புகார்கள் வரிசை கட்டி வந்தும், பல பொதுநல வழக்குகள் போடப்பட்டும், எல்லாவற்றையும் தன் அரசியல் பலத்தாலும், பண பலத்தாலும் உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார் இந்த ஆன்மிகம் பேசும் சமூக விரோதி.

முடிவு தான் என்ன?

தொடர்ந்து இதைப் போலவே வன ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு, கொங்கு மண்டலத்தின் மழை கேள்விக்குறியாவதுடன், சிறுவாணியின் நீராதாரமும் உறிஞ்சப்பட்டு, கோவை மக்கள் குடிதண்ணீருக்கு அல்லாட வேண்டிய நிலை வெகு விரைவில் வரும்.

தடுக்க வேண்டிய அரசாங்கமும், காவல் துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இதில் அவதியுறப் போகும் பொதுமக்களுக்கு யார் பொறுப்பு?

இதை தடுத்து நிறுத்துவது யார்?

இனியாவது விழித்திரு தமிழா…!

யோகமென்னும் மாயவலையில் வீழ்த்தி, நம் சமூகத்தைச் சுரண்டும் ஜக்கி போன்ற சமூக விரோதிகளை அழித்திட விழித்திடு தமிழா…!

– கலியுகபாரதி

 Courtesy: anniyans.com