சகாயம் சாதித்த வேட்டி தினம்: மகளிரும் கொண்டாடலாமே!

“வேட்டி தமிழர்களின் ஆடை மரபின் அழகிய வெளிப்பாடு. பாரம்பரியத்தின் அடையாளம்” என்பதை நினைவூட்டி, வேட்டி தினத்தை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தி, வேட்டியை தமிழர்கள் மத்தியில் உணர்வுமிக்க ஒரு ஆடை என மீண்டும் நிறுவிய பெருமைக்குரியவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.

அவர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது, “தைப்பொங்கலையொட்டி ஜனவரி 1 முதல் 14ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும்” என தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதம் வருமாறு:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடை பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்டகாலமாய் நின்று நிலைத்தது வேட்டி. அது, தமிழர்கள் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு மட்டுமின்றி, பாரம்பரியத்தின் பகட்டான பதிவும்கூட. மானம் காத்ததுடன் மண்ணின் மணத்தை மாண்புற மலரச் செய்ததும் இந்த வேட்டிதான்.

ஆனால், இன்றைய நவீன நாகரிகச் சூழலில் பெரும்பாலான தமிழர்களிடம் இருந்து வேட்டி விலகிச் சென்றுவிட்டது. கம்பீரத்தின் அடையாளமான வேட்டியை இன்று அதிகம் காண முடிவதில்லை. அதை ஆடையாக மட்டும் பார்க்காமல் எளிய நெசவாளர்களின் வியர்வை வெளிப்பாடாக; உழைப்பின் உன்னத உருவமாக பார்க்க வேண்டும். எனவே, வேட்டி என்ற அழகான ஆடை மரபை ஆராதித்திடவும் வலுப்படுத்திடவும் அதை தொய்விலாது நெய்கின்ற நெசவாளர்களுக்கு தோள் கொடுத்திடவும் வேட்டி தினம் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கலுக்கு முன்னால், ஜனவரியில் ஏதாவதொரு நாளை எல்லோரும் வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினத்தில் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் விருப்பத்துடன் வேட்டி அணிந்து, மரபின் மாண்பினை வேட்கையுடன் வெளிப்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு சகாயம் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜனவரி முதல் இரு வாரங்களில் ஒருநாள் பெரும்பாலான ஆண்கள் வேட்டி உடுத்தி, வேட்டி தினம் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

இந்நிலையில், உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனம், ஜனவரி 6ஆம் தேதியை ‘சர்வதேச வேட்டி தினம்’ என அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி, வருகிற 6ஆம் தேதி வழக்கம் போல் வேட்டி தினம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

வேட்டி தினத்தை ஆண்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டுமா? பெண்கள் கொண்டாடக் கூடாதா? மேலே உள்ள படத்தைப் பாருங்கள். வேட்டி – சட்டை பெண்களுக்கு கண்ணியமான, கம்பீரமான ஆடையாகத் தானே இருக்கிறது! உழைக்கும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவும், ‘பெண்ணடிமைத்தனம் ஒழிய ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி ஆடை அணிய வேண்டும்’ என்ற தந்தை பெரியாரின் கனவு நனவாகவும் தமிழ் பெண்களும் ‘வேட்டி தினம்’ கொண்டாடலாமே!