பிரணாய் ராய் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: “அடக்கு முறைக்கு என்டிடிவி அஞ்சாது!”

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் மத்திய மோடி அரசின் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். “இத்தாக்குதலை என்டிடிவி நிறுவனம் சோர்ந்து போகாமல் எதிர்கொள்ளும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள அவர்களது வீடு உட்பட 4 இடங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை முதல் சி.பி.ஐ. சோதனை நடைபெற்று வருகிறது.

“பழைய, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டு இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது” என என்டிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிபிஐ சோதனை குறித்து அச்செய்தி நிறுவனம் தனது தொலைக்காட்சியில், “இன்று காலை சிபிஐ அமைப்பு என்டிடிவி நிறுவனம் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டுள்ளது. பழைய, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு அமைப்புகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் இத்தாக்குதலை என்டிடிவி நிறுவனம் சோர்ந்து போகாமல் எதிர்கொள்ளும். பேச்சுரிமையையும் ஜனநாயகத்தையும் நசுக்கும் இத்தகைய செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பலியாகிவிட மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.