மோடியின் திடீர் அறிவிப்பை கண்டித்து சென்னை பாஜக அலுவலகம் நாளை முற்றுகை!

ரூ.100, ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் மோடி அரசின் திடீர் முடிவைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு, சென்னை பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ தலைமையில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு இந்த முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

இதனையொட்டி மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது: மோடியின் கருப்புப் பண மோசடி!

ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம்?

கருப்புப் பண முதலைகளின் எந்த வகை முதலீடுகளையும் முடக்காது, சாமானிய மக்களின் சேமிப்பையும்  சம்பளத்தையும் வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல்!

மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை!

மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி, சாதாரண மக்களை நள்ளிரவில் நடுத்தெருவில் தள்ளியுள்ளது.

மோடியின் இந்த நடவடிக்கை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கப்பட்ட பணத்தை வெளிக்கொண்டு வராது. நகைகளாகவும் சொத்துக்களாகவும் நிலங்களாகவும், பதுக்கப்பட்ட கருப்புப் பண  முதலீடுகளை ஒன்றும் செய்யாது.

இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்புப் பணத்தை 500, 1000, ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.

கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி ரூபாய்! இந்த மோசடிப் பேர்வழிகளின் பெயரைக்கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடியா, கருப்புப் பணத்தை மீட்கப் போகிறார்.?

கள்ளப்பணம், கருப்புப் பணம் குவியவும், லஞ்ச ஊழல் பெருகவும் மக்களா காரணம்? கருப்புப் பண முதலைகள் செய்யும் குற்றங்களுக்காக சாமானிய மக்கள் சாப்பாடும், மருந்தும் வாங்க வழியில்லாமல் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?.

சாமானிய மக்கள் மீதான தற்போதைய பொருளாதாரத் தாக்குதலை எதிர்க்காவிட்டால் அரசியல் பாசிச பயங்கரவாதத் தாக்குதலாக வரும், எச்சரிக்கை.

அனைத்துப் பிரிவினரும் போராடாமல், மோடியின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க முடியாது!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.