“பா.ஜ.க. அறிக: நாங்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு அல்ல…!”

தமிழகத்தில் இந்து – இஸ்லாமியப் பகையை மூட்டி, அதன்மூலம் குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி முதலில் சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மதுரையைச் சுற்றி இருக்கும் சில கிராமங்களில், வீட்டில் நல்லது கெட்டது நடக்கும்போது, அனைத்து சமுதாய மக்களும் வருவது தேவையாக கருதப்பட்டது. அப்போது இஸ்லாமியர்கள் இல்லாவிட்டால் அது ஒரு குறையாக நினைக்கப்பட்டது. அப்படி இஸ்லாமியர் இல்லை என்பதற்காக இஸ்லாமிய குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்து குடியமர்த்தப்பட்டனர்.

எங்கள் வீட்டில் இறப்பு நடந்தால் இஸ்லாமிய குடும்பப் பெண்கள் சகோதர முறைக்காக வந்து அழும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

எங்கள் ஊரில் நாங்கள் செய்து கொடுக்கும் ரம்ஜான் நோன்புக் கஞ்சியை தான் இஸ்லாமியர்கள் குடிப்பார்கள்.

இன்னும் நான் எத்தனையோ கதை சொல்லலாம்.

அவர்களும் நாங்களும் வேறு வேறு அல்ல.

குணத்திலும் நாங்கள் ஒரே மாதிரி தான்.

எங்களுக்கு முன்கோபம் உண்டு. உணர்ச்சிவசப்படுவோம். எங்களை சுலபமாக யாரும் ஏமாற்றலாம்.

எங்களுக்குள் பிரச்சினைகளும் இருக்கின்றன. “இவர்கள் யார் நோன்புக் கஞ்சியை காய்ச்சிக் கொடுக்க?” என வசனம் பேசியவர்களும் உண்டு.

ரகசியமாக, “இவர்கள் பாகிஸ்தான் குரூப்” என பேசும் எங்கள் ஆட்களும், “நம்ம கூட்டத்துக்கு பிரச்சினைனு வந்தா ஒரு பய வர மாட்டான்” என பேசும் இஸ்லாமியர்களும் உண்டு.

ஆனால், எல்லாவற்றையும் தாண்டி எங்கள் உறவு தொடரும். நாங்கள் இந்த மண்ணின் மக்கள். நாங்கள் ஒன்றாகப் பிறந்தோம். ஒன்றாக வாழ்ந்தோம். ஒன்றாக மடிவோம்.

எங்கள் முன்னோர்களைப் போல நாங்கள் இன்று நெருக்கமாக வாழாமல் இருக்கலாம். அதை சரி செய்ய எங்களுக்கு தெரியும்.

உலகில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் மத சகிப்புத்தன்மை தான் பேச முடியும். எங்களால் தான் மதங்களுக்கு இடையில் ‘மாமா, மச்சான்’ உறவையே ஏற்படுத்த முடியும்.

எங்களுக்கு நடுவில் வர எவனுக்கும் உரிமை இல்லை.

– பிரபு கண்ணன் முத்தழகன்

Read previous post:
0a1
கருணாநிதிக்கும் உடல்நலக் குறைவு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில்,

Close