“தமிழ் சமூகம் செய்த பாவத்தின் சம்பளம் – சமகால எழுத்தாளர்கள்!”

பொதுவாக தமிழர்கள் எழுத்தாளர்களை கொண்டாடுவதில்லை என சொல்வார்கள். அதையும் எழுத்தாளர்களே அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். கேரளா, ஃப்ரான்ஸ் என உதாரணங்களை லோக்கலில் இருந்து இண்டர்நேஷனல் வரை அடுக்குவார்கள். நானும் அந்த எமோஷனல் பிளாக்மெயிலில் அடிக்கடி சிக்கி “நிஜந்தானோ” என யோசித்ததுண்டு. பின் மீண்டு யோசித்தால் தமிழின் சமகால இலக்கிய சூப்பர்ஸ்டார்களின் யோக்கியதை புரிந்துவிடும்.

முன்பு ஒரு சூப்பர்ஸ்டார் நித்தியானந்தாவின் பராக்கிரமங்களை வாவ் வாவ் போட்டு எழுதினார். நித்தி முந்நூறு கிமீ தொலைவில் சித்து விளையாட்டில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த அதே சமயம், நம் சூப்பர்ஸ்டாருக்கு மட்டும் அவர் இருக்கும் திசையில் தரிசனம் தந்ததாக எல்லாம் எழுதினார் சூப்பர்ஸ்டார். அதன்பின் நடந்த கூத்தெல்லாம் இணையம் அறியும்.

இப்போது எதிர்முகாமின் சுப்ரீம் ஸ்டார் ஆரம்பித்திருக்கிறார். ஜக்கி எப்போது தன்னை கடவுள் என்றார்? அவர் யோகா சொல்லித் தருகிறார். அதற்கு ஒரு விலை கேட்கிறார். விருப்பமிருந்தால் கொடு என கால் கிமீ நீளத்துக்கு எழுதுகிறார்.

தமிழக அரசியல் களம் குழப்பத்தில் இருந்தபோது இவர்களிடம் இருந்து ஒரு 200 சொற்கள் வரவில்லை. தமிழக மக்கள் தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடியபோது ஒரு விளக்கமோ ஆதரவோ தந்ததாக தெரியவில்லை. இளைஞர்கள் பெரிய சக்தியாக மாறியபோது அவர்களை வழிநடத்த, வழிகாட்ட நாலு செமீ கூட எழுத முடியாமல் போனது அவர்களால். மக்களுக்கும் இந்த மடாதிபதிகளுக்குமான தூரம் எத்தனை கிமீ இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

இவர்கள் எடுத்துக் காட்டிய மொழியின் எழுத்தாளர்கள் எளிய மக்களுக்காக, அவர்களின் அரசியலுக்காக என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்பதை தேடிப் பார்க்கட்டும்.

தின்ற சோறு செரிக்காமல் இலக்கியம் பேசும் ஐயன்மீர்கள் வேண்டுமென்றால் இவர்களின் எழுத்துகளை சிலாகித்துக் கொள்ளட்டும். ஆனால் இவர்களை தமிழர்கள் ஏன் கொண்டாடவில்லை என்ற கேள்விகளை எவனாவது எழுப்பினால் தான் எழவு பிபி எகிறுகிறது.

உண்மையில் இந்த கோவமெல்லாம் இந்த எழுத்தாள ஜோக்கர்களின் ரசிகர்கள் மீதுதான் வர வேண்டும். இத்தனைக்கும் பின்னரும் “இப்படிலாம் எழுத வேற யார் இருக்கா?” என்ற கமெண்ட்டுடன் என் கண்ணில் பட போகிறவர்கள் இவர்கள் தான்.

தமிழ்ச் சமூகம் செய்த பாவத்தின் சம்பளம் அரசியல்வாதிகளோ, சினிமாக்காரர்களோ அல்ல; சமகால எழுத்தாளர்கள் தான்.

KARKI BAVA