“தொழிலாளர் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை மார்க்ஸ் கையும் களவுமாகப் பிடித்தார்!”

கிறிஸ்து பிறப்புக்கு முன், பிறப்புக்குப் பின் என ஆண்டுகளைக் குறிப்பிடுவதுபோல், மாமேதை காரல் மார்க்ஸுக்கு முன், காரல் மார்க்ஸுக்குப் பின் என ஆண்டுகளைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனப் பலர் கூறியுள்ளனர். இதற்கு வலுவான காரணங்கள் இல்லாமல் இல்லை.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்ஸ், அவருடன் இணைந்து பணியாற்றிய எங்கல்ஸ் இருவரும் சேர்ந்து உருவாக்கிய மார்க்ஸியக் கருத்தியல், மனிதகுலம் உள்ளவரை வழிகாட்டும் ஒளிவிளக்காக நிலைத்து நிற்கும். காரணம், மார்க்ஸியக் கருத்தியல் ஒரு ஆரூடம் அல்ல; யூகமும் அல்ல, அது அறிவியல்பூர்வமானது.

கடவுள் மனிதனைப் படைத்தார் என்றே எல்லா மதங்களும் சொல்லி வருகின்றன. இல்லை; ஒரு செல் உயிரி அமீபாவிலிருந்து மனிதக்குரங்கு வரையிலும், மனிதக்குரங்கிலிருந்து மனிதன் வரையிலும் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் விளைவே மனிதன் என்றார் டார்வின். அவரது பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

இதைப் போல் மனிதகுல வரலாற்றை ஆய்வுசெய்து, ஆண்டான் அடிமை இல்லாத ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம் தொடங்கி, முதலாளித்துவச் சமுதாயம் வரை சமூக மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இயங்கியல் அடிப்படையில் அறிவியல்ரீதியில் ஆய்வுசெய்தார் மார்க்ஸ். இதன் மூலம் முதலாளித்துவம் வீழ்ச்சியுறுவதும் சோஷலிசம் வெற்றிபெறுவதும் தவிர்க்க முடியாதது என்ற ஆய்வு முடிவுக்கு வந்தார்.

மார்க்ஸியம் பிறந்தது

1836-ல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் சேர்ந்த மார்க்ஸ், பல துறைகள் பற்றி படிக்கத் தொடங்கினார். அது பற்றி அவரே தனது தந்தைக்குக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

`பல துறைகளில் வாசிப்பில் ஈடுபட்டிருந்த நான் பல நாட்கள் உறங்க முடியவில்லை; என் மனதுக்குள் பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் மனதும் உடலும் மிகவும் கிளர்ச்சி அடைந்தன. இதனால் என் உடல்நலம் குன்றியது. சிறிது காலம் ஏதேனும் ஒரு கிராமத்துக்குச் சென்று வசிக்குமாறு வைத்தியர் கூறினார். அப்படியே சென்று உடல் நலம் தேறினேன்… மீண்டும் ஆய்வில் மூழ்குவேன். தூய்மையான முத்துகளைக் கண்டடைவேன். அவற்றைக் கொண்டுவந்து சூரிய வெளிச்சத்தில் வைப்பேன்’.

தத்துவம் சம்பந்தமாக ஜெர்மனியில் நடந்துவந்த விவாதம், கருத்து மோதலின் சாராம்சத்தை அவர் ஆய்வு செய்தார். பிரிட்டனில் ஏற்பட்டு வந்த முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் அதன் பொருளாதார அம்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பிரெஞ்சு தேசத்தில் ஏற்பட்ட சோஷலிச அரசியல் வளர்ச்சிப் போக்கை ஆய்வு செய்தார்.

இவற்றை மூலமாகக் கொண்டே மார்க்ஸியம் என்ற மகத்தான கருத்தியல் உருவானது. தனது உற்ற தோழர் எங்கெல்ஸின் பங்களிப்புடன் மார்க்ஸ் இதை உருவாக்கினார். தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளையும், மற்ற பல துறைகள் பற்றிய ஆழ்ந்த கருத்துகளையும் கொண்டதே மார்க்ஸியம்.

மார்க்ஸும், எங்கெல்ஸும் இணைந்து தயாரித்த ‘கம்யூனிஸ்ட் கட்சி’யின் அறிக்கை 1848-ல் வெளியிடப்பட்டது. சர்வதேச அளவில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆவணங்களில் முக்கியமானது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நிர்ணயிப்பின் அடிப்படையில் இருவரும் இணைந்து தொடர்ச்சியாகப் பல நூல்களை எழுதினார்கள்.

மேலும், முதலாளித்துவப் பொருளாதாரத்தை அலசி ஆராய்ந்து, மார்க்ஸ் பல ஆண்டுகள் ஆய்வுசெய்து ‘மூலதனம்’ என்ற மூன்று தொகுதிகளில் நூல்கள் எழுதினார். தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் எவ்வாறு சுரண்டுகிறார்கள், அபகரிக்கிறார்கள் என்பதை ‘உபரி மதிப்பு’ என்ற தலைப்பில் மார்க்ஸ் அறிவியல்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளார். தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை மார்க்ஸ் கையும் களவுமாகப் பிடித்தார் என்று மகாகவி மாயகோவ்ஸ்கி பிற்காலத்தில் குறிப்பிட்டார்.

இந்தியா மீதான பார்வை

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏற்பட்ட அரசியல், சமூக நிகழ்வுகளை மார்க்ஸ் கூர்மையாகக் கவனித்து, கருத்துகளைத் தெரிவித் துள்ளார். பல மன்னர்களின் ஆட்சி, வெளி நாட்டவர்கள் படையெடுப்பு, கடைசியாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யக் காலனி ஆதிக்கத்தின் கீழ் உழன்ற இந்தியர்கள், குறிப்பாக கிராமப்புறத்து மக்கள் பட்ட கஷ்டங்களை, அவலங்களை மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “பரம்பரை அடிப்படையில் தொழில் பிரிவினை; அதை அடித்தளமாகக் கொண்ட சாதிகள் ஆகியவை இந்தியாவின் முன்னேற்றத்துக்கும், இந்தியாவின் சக்திக்கும் தடையாக விளங்குகின்றன” என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார்.

“1857-ல் சிப்பாய்ப் படையினர் தங்களது ராணுவ அதிகாரிகளைக் கொன்றனர். முஸ்லிம்களும் இந்துக்களும் தங்களுக்கு இடையிலான பகை உணர்வை மறந்து ஒன்றாகச் சேர்ந்து, தங்களது பொது எதிரியின் அடக்குமுறைக்கு எதிராகத் திரண்டனர்” என மார்க்ஸ் இந்து – முஸ்லிம் மக்கள் மத்தியில் அந்நியர் ஆட்சிக்கு எதிராக இருந்த ஒற்றுமையை அன்றே பாராட்டியிருக்கிறார்.

மார்க்ஸியத்தின் வளர்ச்சி

இத்தகைய மகத்தான மார்க்ஸியத்தை லெனின் வளர்த்தெடுத்தார். இந்த மார்க்ஸிய-லெனினியத்தின் வழிகாட்டலில்தான் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு, சோஷலிசம் கட்டமைக்கப்பட்டது. உலக வரலாற்றில் முதல் முறையாக வறுமை, வேலையின்மை உள்ளிட்ட சமூகக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டன. மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். எனினும் அங்கு ஜனநாயக மறுப்பு, சோஷலிசக் கட்டமைப்புக்கு உள்ளேயே உற்பத்தியை நவீனமயமாக்கத் தவறியது உள்ளிட்ட பல தீவிரமான தவறுகள் நேர்ந்தன. இதன் விளைவாக அங்கு சோஷலிசத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் சோஷலிசம் தோற்றது; முதலாளித்துவம் வென்றது என்ற கூக்குரல்கள் எழுந்தன. ஆனால், முதலாளித்துவ நாடுகளில் மீண்டும் மீண்டும் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளும், ஏற்றத்தாழ்வுகளும் மேலும் மேலும் அதிகரித்துவருவதும் ‘முதலாளித்துவம் வென்றது’ என்ற போலிப் பெருமையைக் கலைத்து வருகின்றன. மார்க்ஸியமும், சோஷலிசமும் மீண்டும் முன்னேறத் தொடங்கியுள்ளன.

முதலாளித்துவம் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் அதிக வலிமையுடன் அது எழும். தொழிலாளி வர்க்க இயக்கம் பின்னடையும். எல்லாம் ஒரு கட்டம் வரைதான். அந்தக் கட்டம் நெருங்கியதும் முதலாளித்துவம் இறுதியாக ஒழிக்கப்படும். தொழிலாளி வர்க்க இயக்கம் இறுதி வெற்றியை அடையும் என்ற பொருளில் மார்க்ஸ் முன்னறிவித்தார். அந்தக் கட்டம், மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக நெருங்கிவருவதை, கண்களை மூடிக்கொள்ளாத எவரும் காண முடியும்.

ஜி.ராமகிருஷ்ணன்,

 மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.

 

Read previous post:
0
3 female IPS officers from Tamil Nadu speak against ‘demeaning’ portrayal of women in movies – Video

Three female IPS officers from Tamil Nadu have voiced concern over portrayal of women in a demeaning manner in movies

Close