“எனது டீன் பிராயத்து நாயகிக்கு முத்தமும், பிரியாவிடையும்!”

எனது வாலிபத்தில், காமம் வைக்கோல் போரின் நடுவே வைக்கப்பட்ட நெருப்புத் துண்டைப்போல எரிந்தது. பெண்ணுடலின் ரகசியங்களை அறிய கூச்ச சுபாவம் கொண்ட எனக்கு அப்போதெல்லாம் சினிமாவே உதவியது.

பெரிய எழுத்து A போட்ட படங்களை யாரும் கண்டுவிடாதபடி மறைந்து சென்று பார்த்தேன். என் துரதிர்ஷ்டம்… அதில் யாராவது ஒரு டாக்டர் போர்டில் படம் வரைந்து ரகசிய நோய்கள் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அல்லது, ஏதாவது சாகசம் நிகழுமென நான் எதிர்பார்த்து சென்ற மலையாளப் படங்களில் எல்லா பாத்திரங்களும் நீதிமான்களாகவே இருந்தனர்.

இந்நிலையில் தனது பரந்த மனதால் என்னை அணைத்துக் கொண்டார் ஜெயமாலினி.

தங்கையைக் காதலித்து அக்கா மீது ஆசைப்படலாமா எனும் அற உணர்வெல்லாம் அப்போது இல்லை. எல்லா தமிழர்கள் போல ஜோதிலட்சுமியிடமும் மனம் பறிகொடுத்தேன்.

பாவம், நேற்று அவர் இறந்து விட்டார். காலம் போன வயதிலும் பாலா படமொன்றில் அவரது ஆட்டத்தைப் பார்த்தேன். நேற்று கண்ணம்மாபேட்டை மயானத்தில் ஒரு கிண்ணம் சாம்பலாகி விட்டார் என் கனவு தேவதைகளுள் ஒருவரான ஜோதிலட்சுமி.

காமமென்பது, உடலென்பது, விழைவென்பது, வாழ்வெனபது தான் என்ன? என எண்ணிப் பார்த்தால், ஒரு கிண்ணம் சாம்பல் தானா என மனம் நடுங்குகிறது.

இப்படி எண்ணுவது ஒரு தத்துவப் பார்வை. ஆனாலும், காதலும் காமமும் இம்மண்ணில் வாழ்வை ருசியாக்குபவை.

எனது டீன் பிராயத்து நாயகிக்கு முத்தமும் பிரியாவிடையும்!

– கரிகாலன்