ரஜினியின் ‘காலா’ படத்தின் டீசர்: மார்ச் 1ஆம் தேதி வெளியாகிறது!

‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துவரும் இப்படத்தில் ரஜினியோடு, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் அடுத்த (மார்ச்) மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என இதன் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீங்கள் எல்லாம் காத்துக் கொண்டிருந்த செய்தி… ‘காலா’ திரைப்படத்தின் டீசர் மார்ச் 1ஆம் தேதி வெளியாகிறது. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காண காத்திருங்கள். இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க” என்று பதிவிட்டுள்ளார்.