சாதிய பெருமிதங்களை, வன்முறைகளை உயர்த்திப்பிடிக்கும் ‘மரு…த்தூ’!

இயக்குநர் முத்தையா எடுத்த சமீபத்திய திரைப்படம் ‘மருது’ முந்தைய திரைப்படம் ‘குட்டி புலி’.

இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப் பிடிப்பவை. அவற்றை பெருமையாக முன்வைப்பவை. மிகவும் ஆபத்தான போக்கை சமூகத்தில் விதைத்துச் செல்பவை. இவற்றின் சாதிய அடையாளங்கள் அது குறித்த பெருமைகளுடன் இந்தப் படங்களில் துல்லியமாகவே சுட்டிக் காட்டப்படுகின்றன. அது குறித்த கூச்சம் அல்லது சமூக உணர்வு ஏதும் துளிகூட இயக்குநருக்கு இருப்பதாக தெரியவில்லை.

முத்தையா போன்ற இயக்குநர்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

‘தேவர் மகன்’ போன்ற படைப்பின் மையத்தை விளங்கிக் கொள்ளாதவர்கள், அவற்றை கடுமையான எதிர்க்கும் ஒரு பகுதிகூட அதைவிட அதிகமான ஆபத்தை உற்பத்தி செய்யும் இம்மாதிரியான பயங்கரவாத படைப்புகளை அதிகம் கண்டுகொள்வதில்லை என்பது சோகம்.

இது போன்ற படைப்புகளை தமிழக மக்கள் ஆதரிக்கவே கூடாது.

– சுரேஷ் கண்ணன்

                                                            # # #

‘மருது’ திரைப்படம் சாதிய காரணங்களையும் தாண்டி இன்னபிற insensitive காரணங்களுக்காகவும் கண்டிக்கப்பட வேண்டியிருக்கிறது.

மலையாளத் திரைப்படமான ‘கத பறயும் போள்’, ரஜினி நடித்து ‘குசேலனாக’ கொத்து பரோட்டா செய்யப்படுவதற்கு முன்பாகவே அது குறித்த ஓர் எச்சரிக்கைப் பதிவை எழுதியிருந்தேன். அதில் பி..வாசுவின் திரைப்பட உருவாக்க முறையிலுள்ள அபத்தங்களில் ஒன்றை உதாரணமாக காட்டியிருந்தேன்.

//இந்த இடத்தில் பி.வாசுவைப் பற்றி சற்று பேச வேண்டும். இவரின் பெரும்பாலான… மன்னிக்கவும்… அனைத்துப் படங்களும் அவரின் இனிஷயல் போலவே இருக்கும் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. (ஆரம்பத்தில் சந்தானபாரதியுடன் இணைந்து எடுத்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ மாத்திரம் ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு). தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் மற்ற பெரும்பாலான இயக்குநர்களைப் போலவே குப்பைகளை தோரணங்களாக அடுக்குபவர். ‘சின்னதம்பி’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நினைத்தால் இப்போது கூட எனக்கு புல்லரிக்கிறது. விதவைத் தாய் ஒருத்தியை அவமானப்படுத்தும் நோக்கத்தில் வில்லன் வண்ணப்புடவை கட்டி, குங்குமம் வைக்கும்போது பாய்ந்து வரும் மகன் குதிக்கும்போது தெறிக்கும் நீரில் தாயின் குங்குமம் அழிந்து புடவையும் வெள்ளையாகி விடும். ஒரு அடிமட்ட pervert-களினால்தான் இவ்வாறெல்லாம் காட்சிகளை யோசிக்க முடியும். இதைப் போல நிறைய பெர்வர்ட்டுகள் தமிழ் இயக்குநர்களாக உள்ளனர். //

‘மருது’ திரைப்படத்திலும் இப்படி ஓர் மூதாட்டி வில்லனால் கொடுமைப்படுத்தப்பட்டு, சாகடிக்கப்படும் காடசிகள் அத்தனை டீட்டெயிலிங்குடன் பதிவாகியுள்ளன. நுண்ணுணர்வு உள்ள எந்தவொரு பார்வையாளனாலும் இப்படிப்பட்ட அபத்தக் கொடுமைகளை சகித்துக் கொள்ளவே முடியாது.

துரதிர்ஷ்டமாக சென்சார் போர்டுகளில் உள்ளவர்களுக்கு காலங்காலமாக நுண்ணுணர்வு இல்லை என்பதும், வழிகாடடி விதிகளை இயந்திரத்தனமாக கட்டிக்கொண்டு அழுவார்கள் என்பதும் இந்தப் படம் மூலமாகவும் நிரூபணமாகியிருக்கிறது.

– சுரேஷ் கண்ணன்