“தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்”: அமீர் ஆவேசம்!

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியினால் பயிர்கள் கருகுவதால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

‘மக்கள் பாதை’ அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, ஆயிரக்கணக்கான படித்த ஆண் – பெண் இளைஞர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர் அமீரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

0a1dஇந்தப் போராட்டத்தை ஒரு சிறுபொறியாக நான் பார்க்கிறேன். இது இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. முழு வெற்றி அடைந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை இது.

ஒரு உழவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாக இது உள்ளது. இப்படி ஒரு போராட்டத்தை இளைஞர்கள் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

விவசாயிகள் தற்கொலைக்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும். விவசாயிகளை காப்பாற்றாத அரசு கலைக்கப்பட வேண்டும். மக்களுக்கான ஆட்சி இங்கு உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எம்பிகள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

ஜாதிப் பிரச்சனை, மதப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று விவசாயிகள் பிரச்சனைக்கும் முகம் கொடுக்க வேண்டும். வேளாண்மைதான் முதல் பிரச்சனை என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. விவசாயிகளின் பிரச்சனை இப்படியே போனால் இந்தியா இன்னும் கொஞ்சம் நாட்களில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரும்.

இவ்வாறு அமீர் கூறினார்.