சமூகநீதி காத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் இயற்கை எய்தினார்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ரத்தினவேல் பாண்டியன், முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 28) சென்னை அண்ணாநகர் 6 வது மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.

நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். 1929-ம் வருடம் பிறந்த இவர், வழக்கறிஞர் தொழில் செய்தார். நெல்லை மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றினார். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தனது திறமையின் காரணமாக முன்னேறிய அவர் 1974-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர், 1988-ம் வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்த மண்டல் கமிஷன் அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்சாதியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கை விசாரித்த ரத்தினவேல் பாண்டியன், “மண்டல் கமிஷன் அறிக்கை செல்லும்” என அதிரடியாக தீர்ப்பு வழங்கி சமூகநீதி காத்தார்.

1994-ல் ஓய்வு பெற்ற ரத்தினவேல் பாண்டியன், அதன் பின்னர், 2007-ம் வருடம் மத்திய அரசின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். நெல்லை மாவட்டத்தில் நடந்த சாதி வன்முறையின்போது அந்தப் பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட ரத்தினவேல் பாண்டியன், `படித்த இளைஞர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு இல்லாததன் காரணமாகவே சாதி மோதல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் இந்தப் பகுதியில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்’ என அரசுக்கு அறிக்கை கொடுத்தார்.

ரத்தினவேல் பாண்டியனின் மனைவி லலிதா. கடந்த 2010-ம் வருடம் மார்ச் 15-ம் தேதி மரணம் அடைந்தார். இவர்களுக்கு சுப்பையா, ராஜேந்திரன், சேகர், கந்தசாமி, காவேரி மணியன் ஆகிய 5 மகன்களும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதில் சுப்பையா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

இயற்கை எய்திய ரத்தினவேல் பாண்டியனின் உடலுக்கு நீதித்துறையினரும், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அமெரிக்காவில் உள்ள மகன்கள் வரவேண்டி இருப்பதால், ரத்தினவேல் பாண்டியனின் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என தெரிகிறது.