400 திரையரங்குகளில் வெளியாகும் ‘தர்மதுரை’ – முன்னோட்டம்!

விஜய் சேதுபதியை கதாநாயகனாக ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் சீனுராமசாமி. அடுத்து இருவரும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்தார்கள். அந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தார். சீனுராமசாமி இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில் சீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘தர்மதுரை’ என்ற படத்தை ‘ஸ்டூடியோ 9’ நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். ‘தர்மதுரை’ என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்து ஏற்கனவே ஒரு படம் திரைக்கு வந்தது. ரஜினியின் அனுமதியுடன் இந்த பெயரை பயன்படுத்துவதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

விஜய் சேதுபதி–சீனுராமசாமி இணையும் ‘தர்மதுரை’ படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். அவருக்கு தேசிய விருது கிடைக்கும் எனும் அளவுக்கு அவரது நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளதாம்

கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஏற்கெனவே இப்படத்தை பார்த்து பாராட்டியிருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இப்படம் இன்று (ஆகஸ்டு 19) உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. வரும் நாட்களில் திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.