“ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டும் பண்பு வளர வேண்டும்!”

சீனிவாசராவ்வை பற்றி படித்துக் கொண்டிருக்கும்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. அதன் கடைசிப் பத்தியை இங்கு கொடுத்திருக்கிறேன்.

‘ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, முன்னேற்றத்துக்காக ஆத்மார்த்தமாகப் பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டும் பண்பு வளர வேண்டும். மாறாக, புறக்கணிக்கும் போக்கு இருக்கிறதோ என்று தோன்றுகிறது. பி.எஸ்.ஆர் போன்ற நல்ல முன்னுதாரணங்கள் வரலாறாக நம்முன் இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்குத் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த தலைவர்களால் மட்டும்தான் பாடுபட முடியும், போராட முடியும் என்ற கருத்து பரப்பப்பட்டுவருகிறது. தாழ்த்தப்பட்டவரின் வலியை அவர்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக உணர முடியும் என்பவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கருத்தை 75 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்து நொறுக்கி, வலியை உணர்ந்தவராக மட்டுமல்லாமல் வலியிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் அம்மக்களுக்கு காட்டிய மகத்தான தலைவர் பி.சீனிவாசராவ்.’

தற்போதைய அசுரன் படத்தில் வரும் சேஷாத்ரி கதாபாத்திரத்தையும் இதே அர்த்தத்துடன் அணுகும் பதிவுகள் தென்படுகின்றன. எத்தனை காலமானாலும் நம்மை பிளக்கும் சிந்தனை மரபுகள் தடையேதுமின்றி நமக்குள் வெற்றிகரமாக படர்வதை காணும்போது அயர்ச்சிதான் ஏற்படுகிறது.

பெரியார், ஆதிக்க சாதியில் பிறந்தவர். மார்க்ஸ்ஸும் எங்கெல்ஸ்ஸும் பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர்கள். பிடலும் அப்படியே. ஆனால் இவர்கள் அனைவரின் பிறப்பையும் வைத்துக் கொண்டு அவர்களின் அரசியலை பேசலாமா என்றால் பேசலாம். பேசிட முடியும். அதில் அநேகமாக நாம் தவறவிடும் விஷயம், பிறப்பு சார்ந்த பேதங்களை எதிர்க்கத் தொடங்கி அதே பேதங்களை நாமும் பார்க்கத் தொடங்கிவிட்டோம் என்பதைத்தான்.

இச்சமூகத்தின் படிநிலைகள் இப்படித்தான் இயங்குகின்றன. நாமே அறிந்திடாத முறைகளில் நமக்குள் ஊடுருவியிருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு களையும் வாய்ப்புகள் வாய்க்கையில் நாம் அவற்றை களையாமல் அவற்றுக்குள் நம்மை தொலைத்து விடுகிறோம்.

ஒரு சமூகத்தின் உச்சத்தில் நின்று பிறருக்காக ஒருவன் குரல் கொடுப்பதாலேயே அவனை புறக்கணித்துவிட முடியாது. ஏனெனில் அவனுக்கு அந்த உயரம் அவன் விரும்பி வாய்த்ததில்லை. பிறப்பால் வாய்த்தது. அவனால் மிக முக்கியமான ஒரு சாத்தியம் உருவாகிறது. நம்மால் சென்று பேசி அடித்திட முடியாத அவனின் சாதி மற்றும் வர்க்க பரப்புகளுக்குள் அவனால் எளிமையாக சென்று சாட்டை வீசிட முடியும்.

சீதாராம் யெச்சூரி, தன் ராவ் என்ற அடைமொழியை தவிர்க்கிறார். அதே நேரத்தில் மாலனும் சாதியை பெயரில் தவிர்த்திருக்கிறார். இருவரையும் ஒரே அரசியலின் பிரதிநிதிகள் என கருதிட முடியுமா? சீனிவாசராவ்வின் பெயரில் சாதி இருக்கிறது. அவரை சாதி அரசியலின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திட முடியுமா?

தன் சாதி கொடுக்கும் அனுகூலத்தை கொண்டு எந்த அரசியலை முன்னெடுக்கிறான், எந்த அரசியலை முலாமாக பூசிக் கொள்கிறான், எதை உண்மையாக பின்பற்றுகிறான் என்பதை ஆராய்வதே நமக்கான அரசியலாக இருக்க முடியும். முற்றுமுதலாக புறக்கணிப்பது அல்ல.

கார்ப்பரெட்டில் வேலை பார்ப்பவன் எப்படி கம்யூனிஸ்ட்டாக முடியுமென கேட்பதற்கும் சேஷாத்ரி-சிவசாமி ஒப்பீடுகளுகும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை.

கார்ப்பரெட் ஊதியத்தை பெற்றுக்கொண்டு, ட்யூக் பைக்கை ஓட்டி, ஆப்பிள் ஃபோனை பயன்படுத்தி, ஒடுக்கப்பட்ட பண்ணை அடிமைகளின் உரிமைகளை ஒருவன் பதிவிடுகிறான் என்றாலும் அவன் நிச்சயமாக எனக்கு தோழனே!

RAJASANGEETHAN