100% காதல் – விமர்சனம்

ஈகோவால் காதலர்களுக்கு இடையே நிகழும் பிரச்சினைகள்தான் ‘100% காதல்’.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் எப்போதுமே தான் ஃபர்ஸ்ட், பெஸ்ட் என்ற ஈகோ அவருக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

கிராமத்தில் ஒழுங்காகப் படிக்காததால், ஜி.வி.பிரகாஷ் படிக்கும் கல்லூரியில் சேர வருகிறார், அவருடைய முறைப்பெண் ஷாலினி பாண்டே. மாமா… மாமா…என ஜி.வி.பிரகாஷையே சுற்றிவரும் ஷாலினி பாண்டேவை, அவர் கண்டு கொள்வதே இல்லை.

ஒழுங்காகப் படிப்பு வராததால் ஃபெயிலாகி விடுவேன் என ஷாலினி பாண்டே அழ, அவருக்கு சொல்லிக் கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதைவைத்து ஜி.வி.பிரகாஷையும் தாண்டி முதல் மதிப்பெண் எடுத்து விடுகிறார் ஷாலினி பாண்டே. ஜி.வி.பிரகாஷுக்குள் ஈகோ தலைதூக்குகிறது.

அடுத்த செமஸ்டரில் யார் முதல் மதிப்பெண் வாங்குவது என ஜி.வி. – ஷாலினி பாண்டே இருவரும் போட்டிபோட்டு படிக்க, இருவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் யுவன் மயில்சாமி முதல் மதிப்பெண் பெற்றுவிடுகிறார். அவர் அடுத்த முறையும் முதல் மதிப்பெண் பெறாமல் இருப்பதற்காக ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே இருவரும் இணைந்து திட்டம் போடுகின்றனர். அந்த திட்டம் வெற்றி பெற்றதா? ஜி.வி.யின் ஈகோ என்னவானது? ஷாலினி பாண்டேவின் காதல் வெற்றி பெற்றதா? என்பதுதான் மீதிப்படம்.

கடந்த 2011-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ என்ற படத்தின் ரீமேக் இது. சுவாரசியமான கதையாக இருந்தாலும், திரைக்கதை வலுவாக இல்லாததால் படம் முழுக்க அரைத் தூக்கம் போடலாம்; செல்போன் நோண்டலாம்; அருகில் இருப்பவர்களிடம் ஜாலியாக சிரித்துப் பேசலாம்.

படத்தின் இயக்குநர் சந்திரமெளலி, ஒரு நடிகரிடமும் கொஞ்சம்கூட வேலை வாங்கவே இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஏகப்பட்ட படங்களில் நடித்த முதிர்ச்சியான நடிகர்களான நாசர், ஜெயசித்ரா, தலைவாசல் விஜய், ரேகா ஆகியோர் கூட ஏனோதானோவென்று நடித்துள்ளனர். நடிகர்களிடம் டயலாக் பேப்பரை மட்டும் கொடுத்துவிட்டு, ‘உங்கள் இஷ்டத்துக்கு நடியுங்கள்’ என இயக்குநர் சொல்லிவிட்டார் போலும்.

படத்தின் நாயகனான ஜி.வி.பிரகாஷ், பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் நடிப்பது போல ஈடுபாடே இல்லாமல் நடித்துள்ளார். அவர் வாயிலிருந்து வசனங்கள் வெளிவருகிறதே தவிர, முகத்தில் எந்த எக்ஸ்பிரஷனையும் பார்க்க முடியவில்லை. க்யூட்டாக ஏதேதோ செய்ய முயன்று, தன்னுடைய எல்லா முயற்சிகளிலும் தோற்றுப் போகிறார் ஷாலினி பாண்டே.

ஜி.வி.பிரகாஷ் இசையில், பாடல்கள் எதுவுமே படத்துக்குத் தேவையில்லை ரகம். பின்னணி இசை கூட இது ஜி.வி.யா? என்று கேள்வி கேட்க வைக்கிறது. ஜெயசித்ரா, ரேகா தொடங்கி, படத்தின் ஒரேயொரு காட்சியில் இடம்பெறும் வாண்டுகள் வரை எல்லோருமே சதா சர்வகாலமும் மேக்கப்போடு இருக்கிறார்கள். மன்னிக்க… மேக்கப்பை அள்ளி மெழுகியுள்ளனர்.

அடுத்தடுத்த காட்சிகள் தொடர்ச்சியாக இல்லாமல், தனித்தனி துண்டுகளாகத் தனித்துத் தெரிகின்றன. சோகமான காட்சிகளில் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. க்ரீன் மேட்டில் எடுக்கப்பட்ட பல காட்சிகள், வெளிப்படையாகத் தெரிகின்றன. குறிப்பாக, கார் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகின்றன.

படத்தின் கலை இயக்குநர் தோட்டா தரணி. ஆனால், ஜி.வி.பிரகாஷ் அறையைத் தவிர வேறு எந்த செட்டுமே உருப்படியாக இல்லை. ஆங்காங்கே போர்டுகளை மட்டும் நிறுத்தி வைத்துள்ளனர்.

இப்படி பல விஷயங்கள் சரியாக இல்லாததால் ‘100% காதல்’ படத்தில் 1% கூட காதலை உணர முடியவில்லை என்பதுதான் உண்மை.

Read previous post:
0a1a
அசுரன் – விமர்சனம்

தன் நிலத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிற உழைக்கும் வர்க்கத்தின் நியாயமான கோபமே ‘அசுரன்’.  தன் மனைவி மஞ்சு வாரியர், மச்சான் பசுபதி மற்றும் 3 பிள்ளைகளுடன்

Close